நெல்லை சந்திப்பு சாலைகுமார சுவாமி கோவிலில் ஒரே நாளில் 43 திருமணம் உறவினர்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்
நெல்லை சந்திப்பு சாலை குமாரசுவாமி கோவிலில் முகூர்த்த நாளையொட்டி நேற்று ஒரே நாளில் 43 திருமணம் நடந்தது.
நெல்லை,
நெல்லை சந்திப்பு சாலை குமாரசுவாமி கோவிலில் முகூர்த்த நாளையொட்டி நேற்று ஒரே நாளில் 43 திருமணம் நடந்தது. உறவினர்கள் ஏராளமானவர்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முகூர்த்த நாள்
நெல்லை சந்திப்பு சாலைகுமார சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டு திருமணம் தடைபட்டவர்கள் இங்கு வந்து சுவாமியை வழிபட்டு சென்றால் உடனே திருமணம் நடைபெறும். மேலும் இந்த கோவிலில் சுவாமி முன்பு திருமணம் நடந்தால் எந்த தோஷங்கள் இருந்தாலும் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இதனால் முகூர்த்த நாட்களில் இந்த கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று வளர்பிறை முகூர்த்த நாள் என்பதால் திருமணம் மற்றும் சுபகாரியங்களுக்கு ஏற்ற நாளாக இருந்தது. இதனால் சாலைகுமார சுவாமி கோவில் நடை நேற்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் நடை திறந்த நேரத்தில் இருந்தே மணமக்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். 5.30 மணி முதல் 7.15 மணி வரை 5 திருமணங்கள் நடந்தன.
43 திருமணங்கள்
காலை 7.30 மணி முதல் 9 மணி வரை எமகண்டம் என்பதால் அந்த நேரத்தில் எந்த திருமணமும் நடைபெறவில்லை. 9 மணி முதல் 10.30 மணி வரை நல்ல நேரம் என்பதாலும், 10.30 மணி முதல் 12 மணி வரை குளிகை காலம் என்பதாலும் இந்த நேரத்தில் திருமணம் செய்தால் நல்லது என்பதால் 9.30 மணிக்கு பிறகு பகல் 11.50 மணிக்குள் தொடர்ந்து 38 திருமணம் நடைபெற்றது.
இந்த கோவிலில் நேற்று ஒரே நாளில் மட்டும் 43 திருமணங்கள் நடந்தது. ஒரே நேரத்தில் 5 ஜோடிகளுக்கு கூட திருமணம் நடத்தப்பட்டது. இதனால் கோவில் வளாகத்தில் மணமக்களின் உறவினர்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
இதனால் நெல்லை சந்திப்பு சாலைகுமார சுவாமி கோவில் பகுதியில் ஒரே மக்கள் கூட்டமாக காணப்பட்டது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து மீனாட்சிபுரம், குறுக்குத்துறை செல்லக்கூடிய சாலையில் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
இந்த போக்குவரத்து நெரிசல் நெல்லை சந்திப்பில் இருந்து வண்ணார்பேட்டை வரை நீடித்தது. இதை போக்குவரத்து போலீசார் சரி செய்தார்கள. இதேபோல் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் நேற்று ஏராளமான திருமணங்கள் நடந்தன.
Related Tags :
Next Story