கல்லூரி மாணவர்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கு


கல்லூரி மாணவர்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கு
x
தினத்தந்தி 12 Sep 2018 10:37 PM GMT (Updated: 12 Sep 2018 10:37 PM GMT)

ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவர்களுக்கான தொழில் முனைவோர் வழிகாட்டுதல் விழிப்புணர்வு கருத்தரங்கினை கலெக்டர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்,


ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட தொழில் மையம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான தொழில் முனைவோர் வழிகாட்டுதல் தொடர்பான ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியை கலெக்டர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்து பேசியதாவது:- தமிழ்நாடு அரசு சுய வேலைவாய்ப்பினை ஊக்குவித்திடும் வகையில் புதிய தொழில் முனைவோர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்லூரி மாணவ-மாணவிகள் சுயமாக தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதற்கான அரசின் மானிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பெறும் வகையில் மாவட்ட தொழில் மையம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஒருங்கிணைந்து, நமது மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் ஒருநாள் கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதே போல நாளை (14-ந்தேதி) கேணிக்கரையில் உள்ள அரசு பெண்கள் கலைக்கல்லூரியிலும், வருகிற 17-ந்தேதி பரமக்குடி அரசு கலைக்கல்லூரியிலும், 18-ந்தேதி முதுகுளத்தூர் அரசு கலைக்கல்லூரியிலும், 19-ந்தேதி திருவாடனை அரசு கலைக்கல்லூரியிலும், 20-ந்தேதி கடலாடி அரசு கலைக்கல்லூரியிலும் நடத்தப்படுகிறது.

வேலை வாய்ப்பில்லாத மாணவர்கள் தயக்கமின்றி சுயமாக தொழில் தொடங்கலாம். இதன் மூலம் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். உதாரணத்திற்கு தமிழக அரசு தற்போது ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுப்புற பாதுகாப்பிற்கு உகந்த பொருட்களை உற்பத்தி செய்தல் போன்று ஆக்கப்பூர்வமாக சிந்தித்து அதனை உற்பத்தி தொழிலாக நடைமுறைப்படுத்தலாம். மாணவ- மாணவிகள் இக்கருத்தரங்கினை முழுமையாக பயன்படுத்தி கொள்வதோடு, அரசின் திட்டங்களை முழுமையாக பெற்று பயன் அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின்னர் கல்லூரி வளாகம் மற்றும் உள் கட்டமைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர், கல்லூரி வளாகத்தில் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு தூய்மையாக பராமரிக்க வேண்டுமென கல்லூரி முதல்வரிடத்தில் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன ஒருங்கிணைப்பாளர் டேனியல் பிரேம்நாத், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி முதல்வர் மகுதம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story