கோவில் திருவிழாவில் நகை பறித்த 2 பெண்கள் சிக்கினர்


கோவில் திருவிழாவில் நகை பறித்த 2 பெண்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 13 Sept 2018 4:10 AM IST (Updated: 13 Sept 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் சிக்கினர்.

ராமநாதபுரம்,


ராமநாதபுரம் அருகே வழுதூரில் அமைந்துள்ள புகழ் வாய்ந்த காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி 2 பெண்கள் நைசாக சாமி தரிசனம் செய்ய வந்த பெண்களின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்கும் செயலில் ஈடுபட்டனர்.

இதில் வேதாளையை சேர்ந்த கருப்பாயி என்பவரின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றபோது அந்த நகை நழுவி கீழே விழுந்தது. இதனால் கருப்பாயி சுதாரித்து பார்த்தபோது, 2 பெண்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் கத்தி கூச்சலிடவே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கேணிக்கரை போலீசார் விரைந்து வந்து 2 பெண்களையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில் அந்த பெண்கள் பெங்களூருவைச் சேர்ந்த ராமராஜ் மனைவி சவுடம்மாள்(வயது 47), ராஜ் மனைவி பாக்கியம்(40) என்பது தெரிய வந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில், திருவிழா கூட்ட நெரிசலில் முனுசுவலசையை சேர்ந்த முத்துச்சாமி மனைவி அம்மாளு அம்மாள்(70) கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை அவர்கள் பறித்தது தெரிய வந்தது. கருப்பாயி கத்தி கூச்சலிட்டதும் சுதாரித்து அம்மாளு அம்மாளிடம் பறித்த நகையை மறைத்து வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த 2 பெண்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story