ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் பங்கேற்பு


ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 Sept 2018 4:30 AM IST (Updated: 13 Sept 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் பங்கேற்றார்.

நெல்லை, 

ரபேல் போர் விமான ஊழலை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் பங்கேற்றார்.

ஆர்ப்பாட்டம்

மத்திய பா.ஜனதா அரசு, இந்திய ராணுவத்திற்கு ரபேல் போர் விமானம் வாங்கியதில் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் கோடி ஊழல் நடந்து இருப்பதாகவும், அதை கண்டித்தும் நெல்லை மாநகர், மேற்கு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு காமராஜர் சிலை முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான பீட்டர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன், பழனி நாடார், எஸ்.கே.எம்.சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சஞ்சய்தத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட நரேந்திரமோடி, நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். அப்போது ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவேன், பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்துவேன் என்று கூறினார்.

ரபேல் போர் விமானங்கள்

ஆனால், அவர் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஊழலை ஒழிப்பேன் என்று கூறிவிட்டு நாட்டிலேயே மிகப்பெரிய ஊழலான ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்து உள்ளார். இந்த பணத்தை மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஈடுகட்ட முடிவு செய்து மக்களுக்கு தேவையில்லாமல் பல வரியை போடுகிறார். நாட்டையே பின்நோக்கி அழைத்து சென்றுவிட்டார்.

ரபேல் போர் விமான ஊழல் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கிராமங்கள் தோறும், வீடுகள் தோறும் எடுத்துக்கூறி மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மக்களுக்கு பாதுகாப்பு இல்லை

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பெரிய தொழில் அதிபர்கள்தான் இந்த ஆட்சியில் பயனடைகிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாட்டில் விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது. விலைவாசி உயர்ந்தால் நாட்டில் வேலை இல்லாத திண்டாட்டம் ஏற்படும். இதனால் கலவரம் ஏற்படும். இதேபோல் இந்த ஆட்சியில் பெண்களுக்கும், சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. ஊழல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். எனவே, வருகிற தேர்தலில் நீங்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய உழைக்க வேண்டும்“ என்றார்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் செல்லக்குமார், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரவி அருணன், வேல்துரை, நெல்லை பாராளுமன்ற தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை, வக்கீல் பிரிவு தலைவர் பால்ராஜ், வக்கீல் காமராஜ், மாநில செயலாளர் ஆலடி சங்கரய்யா, முன்னாள் மாவட்ட தலைவர்கள் எஸ்.கே.டி.பி.காமராஜ், தமிழ்செல்வன், சுந்தரராஜ பெருமாள், இளைஞர் அணி தலைவர் ராஜீவ்காந்தி, அமீர்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story