பிளாஸ்டிக் தடை உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது


பிளாஸ்டிக் தடை உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது
x
தினத்தந்தி 12 Sep 2018 11:17 PM GMT (Updated: 12 Sep 2018 11:17 PM GMT)

பிளாஸ்டிக் தடை உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச்செயலாளர் சிவநேசன் கூறினார்.

ஈரோடு, 


தமிழ்நாட்டில் வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கான விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பிளாஸ்டிக் தடை குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ராக்கப்பன் தலைமை தாங்கினார். எம்.சி.ஆர். நிறுவனங்களின் தலைவர் எம்.சி.ராபின், சி.ஐ.ஐ. தலைவர் ராதாகிருஷ்ணன், ஈடிசியா தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில இணைச்செயலாளர் சிவநேசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவும், பயன்படுத்தவும் முழுமையாக தடை விதிப்பதன் மூலம் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்பதை தவிர்த்து, பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்போம் என்று உறுதி கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள் தடை காரணமாக லட்சக் கணக்கான தொழிலாளர்கள், வியாபாரிகள் வேலை இழக் கும் அபாயம் உள்ளது. பிளாஸ் டிக் கழிவுகள் மேலாண்மை முறைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். மற்ற மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட் கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் வரை தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பாலு, முன்னாள் செயலாளர் வி.கே.ராஜமாணிக்கம், ஈடிசியா முன்னாள் தலைவர் சண்முகம் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் பலர் கலந்துகொண்டனர். 

Next Story