விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு
பெருந்துறை அருகே விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
பெருந்துறை,
கோவை மாவட்டம் ஒண்டிபுதூரை சேர்ந்தவர் நாகராஜ். அவருடைய மகன் நவீன் (வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். திருப்பூர் சிக்கண்ண கல்லூரி ரோட்டில் வசித்து வருபவர் பிரேம் (20). இவரும், நவீனும் ஒரே கல்லூரியில் படித்து வந்தார்கள். 2 பேரும் நண்பர்கள் ஆவர். நவீனும், பிரேமும் நேற்று காலை திருப்பூரில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்கள். மோட்டார்சைக்கிளை நவீன் ஓட்டினார். பிரேம் பின்னால் உட்கார்ந்து இருந்தார். இவர்கள் பெருந்துறை அருகே பெரியவேட்டுபாளையம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த சரக்கு வேனும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராவிதமாக மோதிக்கொண்டன.
விபத்து நடந்ததும் சரக்கு வேனை டிரைவர் நிறுத்திவிட்டு தப்பித்து அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்கள். இதில் உயிருக்கு போராடிய நவீனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி நவீன் பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த பிரேம் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story