களம் இருந்தும் பலன் இல்லையே...!


களம் இருந்தும் பலன் இல்லையே...!
x
தினத்தந்தி 13 Sept 2018 11:45 AM IST (Updated: 13 Sept 2018 11:45 AM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு பழங்காலத்தில் இருந்தே வீரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

மனித இனம் வேட்டை நிலையில் இருந்த காலத்தில் இலக்கை தாக்குதல், துரத்துதல் என்று பயிற்சி முறையாக தொடங்கிய விளையாட்டு, இன்று உலகின் ஒவ்வொரு நாட்டின் கவுரவத்தை தீர்மானிக்கும் அடையாளமாக மாறியுள்ளது.

இன்றைய நவீன காலத்தில் தனி மனிதனின் உடல் நலத்துக்கு இந்த விளையாட்டுகள் நல்ல உடற்பயிற்சியாக உள்ளன. ஆனால் இன்றைய இந்திய சமுதாயத்தில் விளையாட்டின் நிலை மிக மோசமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது.

‘காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் விளையாட்டு என்று
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா’

என்று பாரதியார் பாடியுள்ளார். ஆனால் நம் பாப்பாக்கள் எந்த நேரமும் படிப்பு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். அதனால் உலகின் மக்கள் தொகையிலும், தேர்தல் ஜனநாயகத்திலும் முதன்மையில் இருக்கும் நமது இந்தியநாடு விளையாட்டில் மிகவும் பின்தங்கி உள்ளது.

கடந்த 2016-ல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் ஒரு வெள்ளியும், ஒரு வெண்கல பதக்கமும் மட்டுமே வென்று பதக்கப் பட்டியலில் உலகின் 67-வது இடத்தையே பிடித்தோம். இப்போது நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 15 தங்க பதக்கங்களை வென்று 8-வது இடத்தை பிடித்தோம்.

கடந்த 60 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, நாம் வேட்டையாடிய பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. சற்று முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. பல ஏழை வீட்டு வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனாலும் நம்மை விட சில கோடியே மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா நம்மைவிட பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் பதக்கம் வென்று இருக்கிறது. நமது மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லாத ஜப்பான், கொரியா, ஈரான் போன்ற நாடுகள் நம்மைவிட அதிக எண்ணிக்கையில் பதக்கம் வென்று முன்னணி வகித்ததும் கவனிக்கத்தக்கது.

எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே குறை சொல்ல பழகிப்போன நமக்கு, இந்த விஷயத்திலும் அப்படியே குறை சொல்லி நமது குற்றத்தை மறைத்து கொள்ள முயல்கிறோம். நமது அரசாங்கம் பலதுறைகளிலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இடஒதுக் கீடுகளையும், சலுகைகளையும் வழங்குகிறது.

ஆனால் அந்த சலுகைகளை பயன்படுத்தி கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பலன் அடைந்த விளையாட்டு வீரர்களில் 80 சதவீதத்தினர் அதற்கு பின் தங்கள் விளையாட்டு பயிற்சியை தொடர்வதில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்தியா போன்ற வளரும் நாட்டில் பல அடிப்படை திட்டங்களுக்கே பணம் தட்டுப்பாடாக உள்ள நிலையில், விளையாட்டுக்கு அதிக பணம் ஒதுக்குவது கடினமே. என்றாலும், ஒதுக்கப்படும் பணம் அதன் முழுபலனை தருவதில்லை. இதற்கு அந்த துறையில் நிலவும் ஊழல், தகுதியற்றவர்களுக்கு சிபாரிசு செய்வது, சலுகைகளுக்காக மட்டுமே விளையாடும் வீரர்களின் மனநிலை போன்றவை முக்கிய காரணமாகும்.

உண்மையில் உலக அளவில் நடத்தப்படும் எல்லா வகை விளையாட்டு போட்டிகளிலும் பங்குபெறும் தகுதியுள்ள ஒரே நாடு இந்தியா மட்டுமே. உலக அளவில் சுமார் 400 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த ஒவ்வொரு விளையாட்டையும், சிறப்பாக விளையாட ஒரு குறிப்பிட்ட உடல் தகுதி இருக்க வேண்டியது அவசியம்.

கூடைப்பந்து, கைபந்து, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளில் உயரம் அதிகம் உள்ள வீரர்கள்தான் சிறப்பாக விளையாட முடியும். அதனால் அதுபோன்ற விளையாட்டுகளில் ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற உயரம் குறைவான குடிமக்களை கொண்ட நாடுகள் ஜொலிப்பது கடினம்.

டேபிள் டென்னிஸ், இறகுபந்து, சில வகை ஜிம்னாஸ்டிக் விளையாட்டுகளில் உயரம் குறைவாக உள்ள வீரர்கள் விளையாடுவது எளிது. அதனால் அதுபோன்ற விளையாட்டுகளில் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த உயரமான வீரர்கள் வெற்றி பெறுவதில் உடல் அளவில் தடைகள் அதிகம். மல்யுத்தம், பளு தூக்குதல் போன்ற விளையாட்டுகளில் இடைநிலை உயரம் உள்ளவர்களே எளிதில் வெற்றி பெற முடியும்.

இப்படி வீரர்களின் உயரத்தை சார்ந்தே சில விளையாட்டுகளின் வெற்றி-தோல்விகள் உள்ளன. உலகின் ஒவ்வொரு நாட்டு குடிமக்களும் ஒரு குறிப்பிட்ட உடல் அமைப்பை கொண்டு இருக்கிறார்கள். அதனால் சில விளையாட்டுகளில் சில நாடுகள் எவ்வளவு செலவு செய்தாலும் பங்கு கொண்டு வெற்றி பெறுவது கடினம்.

ஆனால் நம் இந்திய நாடு மட்டுமே உயரமான, நடுத்தர, குறைவான உயரம் கொண்ட என்று எல்லா வகை உடல் அமைப்பும் உடைய குடிமக்களை கணிசமான அளவில் பெற்றுள்ளது. இது இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரப்பிரசாதம்.

இதுமட்டுமல்ல சில விளையாட்டுகள் சில நிலஅமைப்பில் மட்டுமே விளையாட முடியும். பனிச்சறுக்கு விளையாட்டில் பனிமலைகளை கொண்ட நாடுகள் மட்டுமே தங்கள் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க முடியும். அலைசறுக்கு போன்ற விளையாட்டுகளை கடல்பரப்பு கொண்ட நாடுகள் மட்டுமே விளையாட முடியும். விரும்பினாலும் நேபாளம், மங்கோலியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் விளையாட முடியாது. நதிகளை கொண்ட நாடுகள் மட்டுமே படகு போட்டியில் பங்கு கொள்ளமுடியும். விரும்பினாலும் அரபு பாலைவன நாடுகள் அதில் பங்குபெற்று வெற்றிபெற முடியாது.

ஆனால் நமது நாடு பனிமலையையும், அலை கடலையும், ஓடும் நதிகளையும், வறண்ட பாலைவனத்தையும் ஒருங்கே கொண்ட நாடு. எனவே எந்த வகை நிலம் சார்ந்த விளையாட்டிலும் நாம் பயிற்சி பெற்று பங்கு கொள்ளமுடியும். இது இயற்கை நமக்கு கொடுத்த கொடை.

உடல் அமைப்பு சார்ந்தும், நில அமைப்பு சார்ந்தும் உலக விளையாட்டுகளில் எல்லாம் பங்கு கொள்ளும் தகுதிகளை உடைய நாம் அந்த தகுதிகள் இல்லாத நாடுகளை விட விளையாட்டில் பின்தங்கி இருப்பது வேதனை அல்லவா?

நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு ரிக்‌ஷாகாரரின் மகள் ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்று இருப்பதும், தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்த தருண் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று இருப்பதும் நமக்கு நம்பிக்கை தரும் செய்திகள்.

எதிர்காலத்திலும் இது போல் தகுதியுடையவர்கள் எங்கு இருந்தாலும் தேர்ந்து எடுத்து வாய்ப்பு கொடுப்பதன் மூலம் உலக விளையாட்டில் நமது திறமையை நிரூபிக்க முடியும். உலகதகுதி கொண்ட விளையாட்டு வீரர்களையும், வீராங்கனைகளையும் கொண்ட நம் நாட்டின் கவுரவத்தை விளையாட்டுதுறையில் உயர்த்துவது அரசின் கடமை மட்டும் அல்ல; ஒவ்வொரு குடிமக்களின் கடமையும் ஆகும்.

- மணி தணிகைகுமார்

Next Story