பழுதாகி நின்ற பஸ் மீது மற்றொரு பஸ் மோதல் 7 பேர் படுகாயம்
திண்டிவனம் அருகே பழுதாகி நின்ற பஸ் மீது மற்றொரு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டிவனம்,
சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 30–க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று விழுப்புரம் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை விழுப்புரம் அருகே கருங்காலிபட்டு கிராமத்தை சேர்ந்த பெருமாள் (வயது 46) என்பவர் ஓட்டினார்.
அந்த பஸ் திண்டிவனம் அருகே டி.வி. நகர் மெயின் ரோட்டில் வந்த போது திடீரென பழுதானது. இதனால் டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். அப்போது பின்னால் சென்னையில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த மற்றொரு அரசு பஸ், பழுதாகி நின்ற பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் பெரம்பலூர் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் அந்த பஸ்சில் வந்த குறும்புதூர் கிராமத்தை சேர்ந்த கண்டக்டர் பாலாஜி(38), நாராயணன்(17), பெரியசாமி(48), சாந்தகுமார்(21), தியாகராஜா(32), முரளி(26), ராஜா(32) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பாலாஜி, நாராயணன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ணலாம்.