கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்
கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
வள்ளியூர்,
கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
2 அணுஉலைகள்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு வர்த்தக ரீதியிலான மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி 2-வது அணுஉலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு, எரிபொருள் நிரப்பும் பணிகளை என்ஜினீயர்கள் மேற்கொண்டனர். இதனால் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி மின்உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி 2-வது அணுஉலை வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே முதலாவது அணுஉலையிலும் பராமரிப்பு மற்றும் எரிப்பொருள் நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி நிறுத்தப்பட்டது. இதனால் கூடங்குளத்தில் உள்ள 2 அணுஉலைகளிலும் மின்உற்பத்தி நடைபெறாததால் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.
மீண்டும் மின்உற்பத்தி
இந்த நிலையில் 2-வது அணுஉலை வால்வில் ஏற்பட்ட பழுது நேற்று சரிசெய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை 6.55 மணிக்கு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. முதற்கட்டமாக 330 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு, படிப்படியாக அதிகரிக்கப்படும். இன்னும் ஒரு சில நாட்களில் 2-வது அணுஉலை முழு உற்பத்தி திறனான 1000 மெகாவாட்டை எட்டும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
Related Tags :
Next Story