மானூர் பகுதியில் ரூ.1 லட்சம் மானியத்தில் விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணை அமைக்கலாம் கலெக்டர் தகவல்


மானூர் பகுதியில் ரூ.1 லட்சம் மானியத்தில் விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணை அமைக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 13 Sep 2018 9:30 PM GMT (Updated: 13 Sep 2018 6:53 PM GMT)

மானூர் பகுதியில் ரூ.1 லட்சம் மானியத்தில் விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணை அமைக்கலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

மானூர் பகுதியில் ரூ.1 லட்சம் மானியத்தில் விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணை அமைக்கலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒருங்கிணைந்த பண்ணை திட்டம்

விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றவும், அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

இந்த திட்டம் சோதனை முறையில் நெல்லை, மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு நெல்லை மாவட்டத்தில் மானூர் வட்டாரத்தை அரசு தேர்ந்து எடுத்து உள்ளது. மானூர் வட்டாரத்தில் 10 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் தலா 50 விவசாய குடும்பங்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் தலா 2 பேர் அதாவது விவசாயி, அவரது மனைவி அல்லது 18 வயதிற்கு மேற்பட்ட மகள் அல்லது மகன் பயனாளிகளாக இருப்பார்கள்.

சிறு, குறு விவசாயிகளுக்கு...

இந்த திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் விவசாயி ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஈடுபாடுடையவராகவும் 50 சதவீத பங்குத்தொகையை செலுத்த முன்வருபவராகவும் இருத்தல் வேண்டும். அரசு ஊழியர்கள் அல்லது அவர்களின் பெற்றோர், மகள், மகன், மனைவி போன்றவர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருக்க இயலாது.

இந்த திட்டத்திற்கான பயனாளிகளை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண் பொறியியல்துறை மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்களால் இறுதி செய்யப்பட்டு கலெக்டரால் ஒப்புதல் வழங்கப்படும்.

நாட்டுக்கோழிகள்

தேர்வு செய்யப்படுகின்ற விவசாய குடும்பத்தினர் 2 கறவைப்பசுக்கள் வாங்க வேண்டும். 1 பசுவுக்கு ரூ. 17ஆயிரத்து 500 அல்லது பசுவின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும். 10 நாட்டுக்கோழிகள் கூண்டுடன் வாங்கிட ரூ.2 ஆயிரத்து 500 அல்லது 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதேபோல் வாத்து, வான்கோழி, காடை, முயல் முதலியவற்றை வாங்கிட ரூ.2 ஆயிரத்து 500-க்கு மிகாமல் மானியம் வழங்கப்படும்.

இந்த பண்ணைகுட்டைகள் மூலம் மழைநீர் சேகரிக்கப்பட்டு விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாகவும், கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குவதால் பண்ணைக்குட்டைகள் அமைப்பது ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேளாண்மை பொறியியல் துறையின் ஆலோசனையின் மூலம் நஞ்சை நிலத்தில் அமைக்கப்படும் மீன் பண்ணைக்குட்டைகளுக்கு ரூ.27 ஆயிரத்து 500 மற்றும் மானாவாரி நிலங்களில் அமைக்கப்படும் பண்ணைக்குட்டைகளுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் 2 பேர் கொண்ட ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். எனவே இந்த திட்டத்தினை சரியான முறையில் பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story