கயத்தாறு அருகே கிராம மக்கள் தர்ணா போராட்டம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை


கயத்தாறு அருகே கிராம மக்கள் தர்ணா போராட்டம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 13 Sep 2018 9:30 PM GMT (Updated: 13 Sep 2018 7:06 PM GMT)

கயத்தாறு அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கயத்தாறு, 

கயத்தாறு அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கலப்பைபட்டி கிராமத்தில் தொடக்கப்பள்ளிக்கூடம் எதிரில் அரச மரத்தடியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பஸ் நிறுத்த நிழற்கூடம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே, அந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து, தனது பெயரில் பட்டா பெற்றதாக கூறப்படுகிறது. இதேபோன்று அந்த கிராமத்தில் உள்ள பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து, வருவாய் துறை அதிகாரிகளின் உதவியுடன் தங்களது பெயர்களில் பட்டா பெற்றதாக கூறப்படுகிறது.

இதனால் கலப்பைபட்டி கிராமத்தில் பஸ் நிறுத்த நிழற்கூடம், சமுதாய நலக்கூடம், ரேஷன் கடை போன்றவை அமைக்க முடியவில்லை. தொடக்கப்பள்ளிக்கூடத்தை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த முடியவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று காலையில் அங்குள்ள அரச மரத்தடி பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊர் நாட்டாண்மை அண்ணாமலை, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நடவடிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கயத்தாறு தாசில்தார் லிங்கராஜ் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர், கலப்பைபட்டி கிராமத்தில் விரைவில் நேரில் பார்வையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து மதியம் அனைவரும் கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லையெனில் விரைவில் நாற்கர சாலையில் மறியலில் ஈடுபடுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Next Story