‘டி.டி.வி.தினகரன் ஆதாரம் இல்லாமல் ஊழல் புகார் கூறக்கூடாது’ அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
‘டி.டி.வி.தினகரன் ஆதாரம் இல்லாமல் லஞ்சம், ஊழல் புகார் கூறக்கூடாது’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி,
‘டி.டி.வி.தினகரன் ஆதாரம் இல்லாமல் லஞ்சம், ஊழல் புகார் கூறக்கூடாது’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊழல்
எல்லா இடத்திலும் லஞ்சம், ஊழல் நடக்கிறது என்று பொதுவாக டி.டி.வி.தினகரன் பேசக்கூடாது. அவர் ஆதாரத்துடன் பேச வேண்டும். லஞ்சம், ஊழல் பற்றிய ஆதாரம் இருந்தால், அதுகுறித்து சட்டமன்றத்தில் பேசலாம். ஆதாரம் இல்லாமல் புகார் கூறக்கூடாது. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகளவு வெற்றி பெறும் வகையில், தமிழக அரசு சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய பாடத்திட்டம் தற்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் வெற்றியால் அடுத்த ஆண்டு அனைவரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்கள்.
தமிழகத்தில் எந்த நெருக்கடி நிலையும் இல்லை. அதனால்தான் சிலர் அரசுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகின்றனர். ஜனநாயக ரீதியாக கருத்துகளை தெரிவிக்கவும், போராட்டங்களை நடத்தவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. இங்கு சட்டம்-ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மின்வெட்டு இல்லை. காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்து உள்ளது. மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் மின்உற்பத்தியில் சிறிது தடங்கல் ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது. மத்திய அரசு சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தியபோது, மாநில அரசுகளை முறையாக கலந்து ஆலோசிக்கவில்லை. எந்த பொருளையும் சரக்கு, சேவை வரிக்குள் கொண்டு வருவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு, மாநில அரசுகளின் மீது பழி போடுகிறது. தங்க தமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் சேருவதற்கு தூது விட்டு கொண்டிருக்கிறார். இங்கிருந்து அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே அவர் அ.தி.மு.க.வில் சேருவதற்கு காரணம் தேடுகிறார். அதனால்தான் அவர் தேர்தல் குறித்து சவால் விடுத்து, அதில் தோற்கும்போது, தானாகவே அ.தி.மு.க.வில் சேருவதற்கு வழி தேடுகிறார்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story