சாயல்குடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு; பொதுமக்கள் அவதி
சாயல்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாயல்குடி,
சாயல்குடி மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்களின் நலன் கருதி நரிப்பையூர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் சுமார் ரூ.40 கோடி செலவில் கடந்த 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிலையத்தில் இருந்து தினமும் சுமார் 38 லட்சம் லிட்டர் குடிநீர் தயாரிக்கப்பட்டு கடலாடி தாலுகாவில் 50 ஊராட்சிகளுக்கும், கமுதி தாலுகாவில் 18 ஊராட்சிகளுக்கும், முதுகுளத்தூர் தாலுகாவில் 21 ஊராட்சிகளுக்கும் என 89 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 396 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின்கீழ் 2 யூனிட்கள் செயல்பட்டு வந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு யூனிட் மட்டுமே செயல்பட்டு வந்தது. இதனால் தேவையான குடிநீர் உற்பத்தி செய்ய முடியாத நிலை உருவாகி குடிநீர் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தநிலையில் மாவட்டத்தின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரூ.1,375 கோடி மதிப்பில் 100 எம்.எல்.டி. தி்ட்டத்தை அறிவித்தது. ஒரு எம்.எல்.டி. என்பது ஒருநாளில் கடல் நீரில் இருந்து 10 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்வதை குறிக்கும். மக்கள் நலன் கருதி அரசு நிதி ஒதுக்கி நலத்திட்டங்களை அறிவித்தாலும், அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் பயன்படாத நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து இந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர். மேலும் அவர்கள் கூறியதாவது:- சாயல்குடி அருகேயுள்ள 5 ஏக்கரில் குதிரைமொழி பகுதியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படும் என 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. எனினும் இதுநாள்வரை இத்திட்டம் ஆரம்பிப்பதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் தான் இந்த பகுதி மக்களுக்கு ஒரே நீராதாரமாக இருந்தது. அதுவும் அலுவலர்களின் மெத்தனத்தால் முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை. இந்தநிலையில் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து வெளியேறும் நீரை சேகரித்து பயன் படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு வெளியேறி ஊருணி போல் தேங்கியுள்ள நீரில் மதிய நேரங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை குளித்தும், உடைகளை சலவை செய்தும் வருகின்றனர்.
இவற்றால் மாசுபடும் தண்ணீர் மீண்டும் அத்தொட்டியில் உள்ள குழாயின் ஓட்டை வழியாக திரும்பச்செல்கிறது. இந்த தண்ணீரை குடிப்பதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தெரியவந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, ஐந்து ஏக்கரில் குதிரைமொழியில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும், காவிரி குடிநீர் குழாய் உடைப்புகளை சரிசெய்து முன்புபோல் நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
மேலும் முன்பு போல் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் கிராமங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story