ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கழிவு நீர் கால்வாய்களில் தூர் வாரும் பணி தீவிரம்
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவு நீர் கால்வாய்களில் தூர் வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவு நீர் கால்வாய்களில் தூர் வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கழிவு நீர் கால்வாய்கள்ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 40 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட நேரு பஜார், நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை, திருவள்ளூர் சாலைகளில் உள்ள கழிவு நீர் கால்வாய்களில் நீண்ட நாட்களாக தூர் வாரப்படாமல் இருந்தது.
இதனால் கழிவு நீர் பாயாத நிலை ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தி அதிகமானது. மேலும் மழை பெய்தால் கழிவு நீர் சாலைகளில் பாயும் நிலை ஏற்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைஇது குறித்து ஊத்துக்கோட்டை பொதுமக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயகுமாரிடம் முறையிட்டனர்.
இதனிடையே பருவ மழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவு நீர் கால்வாய்களில் தூர்வார பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன் பேரில் துப்புரவு பணியாளர்களை கொண்டு தூர் வாரும் பணி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயகுமார் மேற்பார்வையில் வேகமாக நடைபெற்று வருகிறது.
வீடுகளில் உள்ள கழிவுகளை, குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை குப்பை தொட்டிகளில் போடாமல் கழிவு நீர் கால்வாயில் போடுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் பாயாத நிலை ஏற்படுவதாக செயல் அலுவலர் ஜெயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
விழிப்புணர்வுவருகிற ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் விற்க, பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்து இருப்பதையும், சணல் மற்றும் துணி பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக செயல் அலுவலர் ஜெயகுமார் தெரிவித்தார்.
இந்த நிலையில் சத்தியவேடு சாலை, திருவள்ளூர் சாலைகளில் இடது புறம், நாகலாபுரம் சாலையில் வலது புறத்தில் கழிவு நீர் கால்வாய்களை இதுவரை அமைக்க வில்லை. இதன் காரணமாக புதிதாக வீடு மற்றும் கடைகள் கட்டுவோர் வலது புறத்தில் இருக்கும் கழிவு நீர் கால்வாயில் கழிவு நீர் விட வேண்டும் என்றால் சாலையை தோண்ட வேண்டி உள்ளது.
கோரிக்கைஇதற்கு நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற வேண்டும். சாலையை தோண்ட எளிதில் அனுமதி கிடைப்பது இல்லை. ஒருவேளை அனுமதி பெற்று சாலையை தோண்டுவோர் குழாய்களை புதைத்த பிறகு அப்படியே விட்டு விடுகின்றனர்.
இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன. இது போன்ற விபத்துகளை தவிர்க்க மேற்கூறப்பட்ட சாலைகளில் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.