டோல்கேட் அருகே தடுப்புச்சுவரில் ஏறிய கன்டெய்னர் லாரி; டிரைவர் படுகாயம்


டோல்கேட் அருகே தடுப்புச்சுவரில் ஏறிய கன்டெய்னர் லாரி; டிரைவர் படுகாயம்
x
தினத்தந்தி 14 Sept 2018 3:00 AM IST (Updated: 14 Sept 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

திருவள்ளூர், 

ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் இருந்து கன்டெய்னர் லாரி ஒன்று இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த செந்தில்குமார் ஓட்டிச்சென்றார். அதே பகுதியை சேர்ந்த ஜெகன்நாதன் கிளீனராக இருந்தார். 

திருவள்ளூர்– ஊத்துக்கோட்டை சாலை டோல்கேட் அருகே நேற்று காலை 5½ மணியளவில் லாரி சென்றபோது அந்த வழியாக சென்ற ஒருவர் சைக்கிளில் சாலையை கடந்தார். அப்போது அவர் மீது மோதாமல் இருக்க செந்தில்குமார் லாரியை வலப்புறமாக திருப்பினார். இதில் லாரி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது ஏறியது. 10 மீட்டர் தூரம் லாரி தடுப்புச்சுவர் மீது ஏறி சென்றதில் கன்டெய்னர் லாரி இரு துண்டானது. இதில் டிரைவர் செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். கிளீனர் ஜெகன்நாதன் காயமின்றி தப்பினார்.

இரும்பு பொருட்கள் நெடுஞ்சாலையில் சிதறியதால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை மீட்டனர். அதன் பின்னர் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து சீரானது.


Next Story