பூந்தமல்லி சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்


பூந்தமல்லி சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Sep 2018 9:30 PM GMT (Updated: 13 Sep 2018 7:52 PM GMT)

பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, பேட்டரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

பூந்தமல்லி, 

அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் மற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் என 18-க்கும் மேற்பட்டோர் பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சிறைக்கு அருகே தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் மற்றும் வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் நீதிமன்றம் உள்ளதால் இந்த சிறை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சிறை துணை கண்காணிப்பாளர் கோதண்டராமன் நேற்று சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இந்த சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பிரபல மோசடி மன்னன் சூளைமேட்டை சேர்ந்த விஜய் தண்டபாணி(வயது 42) என்பவரிடம் இருந்து 1 செல்போன், சிம்கார்டு மற்றும் பேட்டரி ஆகியவற்றை அவர் பறிமுதல் செய்தார்.

இதுதொடர்பாக பூந்தமல்லி போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் பூந்தமல்லி போலீசார் சிறைக்குள் உள்ள கைதிக்கு செல்போன் கிடைத்தது எப்படி?. அவருக்கு அதை கொடுத்தது யார்?. சிறையில் இருந்தபடி அந்த கைதி யாருக்கெல்லாம் போன் செய்து உள்ளார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் இதே சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன், சார்ஜர் வயர், புளுடூத் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story