மின் வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதா? தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மின் வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர்,
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் சம்மேளன மாநில செயற்குழு முடிவின்படி தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகரில் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையிலும், செயல் தலைவர் முனியாண்டி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராதா கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் ஜான் ஆசீர்வாதம், பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மாநில தலைவர் மணிகண்டன், செயலாளர் ஞானகுரு ஆகியோர் பேசினர்.
மின் வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. முத்தரப்பு ஒப்பந்தப்படி புதிய பதவிகளை உடனே அனுமதிக்க வேண்டும். ஊதிய உயர்வில் மறுவிருப்பம் தெரிவிக்க அனுமதிப்பதோடு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.380 வழங்க வேண்டும். பகுதிநேர பணியாளர்களை அனைத்து பிரிவு அலுவலகங்களில் அனுமதிக்க வேண்டும்.
அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போல மின் வாரிய ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டியது அவசியமாகும் ஒப்பந்த தொழிலாளர் பணி காலத்தையும் கணக்கில் எடுத்து பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 40 வயதான பெண் கணக்கீட்டாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கிட வேண்டும்.
2000-க்கும் மேற்பட்ட கணக்கீட்டு ஆய்வாளர்கள் பதவி உயர்வினை உடனடியாக வழங்குவதோடு தணிக்கை பிரிவுகளில் கூடுதல் பணி இடங்களை அனுமதித்து நிலுவையில் உள்ள ஓய்வூதிய ஒப்புதல்களை விரைவுபடுத்தவேண்டும். இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story