அருண் ஜெட்லியை விஜய் மல்லையா சந்தித்த விவகாரம் காங்கிரஸ்-பா.ஜனதா கடும் மோதல் இருகட்சி தலைவர்களும் சரமாரி குற்றச்சாட்டு


அருண் ஜெட்லியை விஜய் மல்லையா சந்தித்த விவகாரம் காங்கிரஸ்-பா.ஜனதா கடும் மோதல் இருகட்சி தலைவர்களும் சரமாரி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Sept 2018 5:45 AM IST (Updated: 14 Sept 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை விஜய் மல்லையா சந்தித்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ்-பா.ஜனதா இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி, 

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை விஜய் மல்லையா சந்தித்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ்-பா.ஜனதா இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்து வருகிறார்.

அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது ஒருபுறமிருக்க, அவரை வெளிநாட்டுக்கு தப்ப விட்டது தொடர்பாக மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எண்ணெய் ஊற்றுவது போல, விஜய் மல்லையா நேற்று முன்தினம் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார்.

அதாவது, தான் வெளிநாடு தப்பிச் செல்லுமுன் மத்திய நிதி மந்திரியை சந்தித்து பேசியதாகவும், அப்போது அவரிடம், வங்கிக்களுடனான பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக கூறியதாகவும் மல்லையா தெரிவித்தார். பின்னர், இது ஒரு தற்செயல் சந்திப்பு என மாற்றி பேசினார்.

இதை உடனடியாக மறுத்த நிதி மந்திரி அருண் ஜெட்லி, முறைப்படி என்னை சந்திப்பதற்கு மல்லையாவுக்கு நேரம் எதுவும் ஒதுக்கவில்லை என கூறினார். மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் ஒருமுறை தன்னிடம் ஓடிவந்து கடன் பிரச்சினை தீர்வுக்கு முயன்று கொண்டிருப்பதாக மல்லையா தெரிவித்ததாகவும் ஜெட்லி கூறினார்.

இந்த சந்திப்பு விவகாரம் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே கடும் மோதலை ஏற்படுத்தி உள்ளது. இருகட்சிகளின் தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளனர்.

விஜய் மல்லையாவுடன் நடந்த சந்திப்பை மறைத்த அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

பின்னர் நேற்று அவர் இந்த விவகாரத்தில் பிரதமரையும் தொடர்புபடுத்தி பேசினார். இது தொடர்பாக அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி அவர்களிடம் கூறியதாவது:-

மல்லையாவை அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்ததாக அருண் ஜெட்லி பொய் கூறுகிறார். 2016-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி பட்ஜெட் தொடர் நடந்து கொண்டிருந்த போது இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இருவரும் 20 நிமிட நேரம் அமர்ந்து பேசியிருக்கின்றனர். இதை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எல்.புனியா நேரில் பார்த்திருக்கிறார்.

இந்த அரசில் அனைத்து முடிவுகளையும் பிரதமர் மோடிதான் எடுக்கிறார். அருண் ஜெட்லியும் அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார். எனவே இந்த குற்றவாளி (மல்லையா) வெளிநாடு தப்பிச் செல்வதற்கு நீங்கள் (ஜெட்லி) அனுமதித்தீர்களா? அல்லது பிரதமர் மோடியிடம் இருந்து உத்தரவு வந்ததா? என்பதை தெளிவாக விளக்க வேண்டும்.

ஒரு பொருளாதார குற்றவாளி, தான் லண்டன் செல்வதற்கு முன் நிதி மந்திரியை சந்தித்து பேசினேன் என கூறி இருக்கிறார். அவர் இந்தியாவை விட்டு வெளியேறுவதை ஏன் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நிதி மந்திரி தெரிவிக்கவில்லை?

இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

இந்த சந்திப்பு குறித்து பி.எல்.புனியா கூறும்போது, ‘நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜெட்லி-மல்லையா சந்திப்பு நிகழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உள்ளன. முதலில் நின்று கொண்டு பேசிய அவர்கள், பின்னர் நாற்காலியில் அமர்ந்து பேசினர். அது ஒரு நெருக்கமான சந்திப்பாகத்தான் இருந்தது’ என்று தெரிவித்தார்.

தான் கூறுவது பொய் என்றால் அரசியலில் விட்டு விலகத்தயார் எனக்கூறிய பி.எல். புனியா, அதேநேரம் உண்மை என்றால் ஜெட்லி அரசியலைவிட்டு விலகுவாரா? என சவாலும் விட்டார்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு விஜய் மல்லையா எழுதிய கடிதங்களை சுட்டிக்காட்டி, பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:-

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, விஜய் மல்லையா, தனது விமான நிறுவனத்துக்கு பெங்களூருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.500 கோடி கடன் கேட்டார். ஆனால், கிடைக்காததால், அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை சந்தித்தார்.

அந்த சந்திப்பு முடிந்தவுடன், பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விஜய் மல்லையா நிறுவனத்துக்கு கடன் தராததற்காக ப.சிதம்பரம் கண்டித்தார். உடனே ரூ.500 கோடி கடன் வழங்கப்பட்டது.

அதுபோல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் விஜய் மல்லையா சந்தித்துள்ளார். அந்த சந்திப்புக்கு நன்றி தெரிவித்து அவருக்கு விஜய் மல்லையா கடிதமும் எழுதி உள்ளார். தனக்கு மன்மோகன் சிங்கின் செயலாளர் டி.கே.ஏ.நாயர் உதவியதாகவும் கூறியுள்ளார். அதன்பிறகு அவரது நிறுவனத்துக்கு கூடுதல் நிதி உதவி அளிக்கப்பட்டது. இத்தகைய சந்திப்புகளும், பிறகு நிதி உதவி வழங்குவதும் புனிதமான காரியம் அல்ல.

விஜய் மல்லையா நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் அளித்தது தொடர்பான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. (அவற்றை காண்பித்தார்). இதுதொடர்பாக ரிசர்வ் வங்கிக்கும், வங்கிகளுக்கும் இடையே ஏராளமான கடித போக்குவரத்து நடந்துள்ளது. அவையெல்லாம், சோனியா காந்தி வழிகாட்டுதலில் முந்தைய அரசு, எப்படி பாரபட்சமாகவும், விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டும் நடந்து கொண்டுள்ளது என்பதை காட்டுகிறது.

ஒட்டுமொத்த சோனியா குடும்பமும் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு ‘ஒரு இனிப்பான ஒப்பந்தத்துடன்’ உதவி செய்துள்ளது. ஒட்டுமொத்த சோனியா குடும்பமும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானங்களில் வர்த்தக வகுப்பில் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், மறைமுகமாக சோனியா குடும்பத்துக்கு சொந்தமானதாகவே இருந்து வந்துள்ளது. அந்த நிறுவனத்தின் நல்ல காலங்களில் ராகுல் காந்திக்கு பங்கு உள்ளது. ராகுல் காந்தி, ஒரு போலி நிறுவனத்தை சொந்தமாக வைத்திருந்தார் என்பதும் ஒரு ஹவாலா வர்த்தகர் மூலம் தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லியை விஜய் மல்லையா தற்செயலாக சந்தித்ததற்கு உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் நேருக்குநேர் சந்திப்பது குற்றம் என்றால், மன்மோகன் சிங்கையும், ப.சிதம்பரத்தையும் தனியாக விஜய் மல்லையா சந்தித்ததற்கு காங்கிரஸ் தலைமையின் பதில் என்ன?

இவ்வாறு சம்பித் பத்ரா கூறினார்.

மத்திய மந்திரி பியுஷ் கோயல், நேற்று நிருபர்களிடையே ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், “தனியார் விமான நிறுவனங்கள் சிரமத்தில் இருக்கும்போது, அதில் இருந்து மீள உதவ வேண்டிய கடமை, மத்திய அரசுக்கு இருக்கிறது” என்று பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பேசிய காட்சி இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி பியுஷ் கோயல் கூறியதாவது:-

மன்மோகன் சிங் மட்டுமின்றி, அப்போதைய சிவில் விமான போக்குவரத்து மந்திரி வயலார் ரவி, அப்போதைய நிதி மந்திரியிடம், ‘நாம் ஏதாவது செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். 2010-ம் ஆண்டில் இருந்தே கிங்பிஷர் ஏர்லைன்சுக்கு காங்கிரஸ் அரசு உதவி வந்துள்ளது. இதற்காக விதிமுறைகளை தளர்த்தி உள்ளனர். திரும்பத்திரும்ப கடன் வழங்கி காப்பாற்ற முயன்றனர்.

கிங்பிஷர் ஏர்லைன்சுக்கும், சோனியா குடும்பத்துக்கும் இடையிலான தொடர்பை ராகுல் காந்தி சொல்லத் தயாரா?

இவ்வாறு பியுஷ் கோயல் கூறினார்.

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘நிதி மந்திரி அருண் ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்துவது உள்நோக்கம் கொண்டது’ என்றார்.

மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

ராகுல் காந்தி லண்டனுக்கு சென்று வந்த பிறகுதான், விஜய் மல்லையா இந்த தகவலை கூறி இருக்கிறார். அவரும், ராகுல் காந்தியும் இணைந்து செயல்படுகிறார்களா? காங்கிரஸ் அரசால் பலனடைந்த விஜய் மல்லையாவை காப்பாற்ற காங்கிரஸ் விரும்புகிறதா? அதனால்தான், அருண் ஜெட்லியுடனான ஒரு வரி உரையாடலை சர்ச்சை ஆக்க பார்க்கிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story