மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Sep 2018 9:30 PM GMT (Updated: 13 Sep 2018 8:38 PM GMT)

காதல் விவகாரத்தில் தற்கொலை செய்த மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மதுரை, 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகள் சிந்துஜா (வயது 23). மதுரையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவரும், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்த ராம்குமார் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இவர்களது காதல் விவகாரத்திற்கு ராம்குமாரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனம் உடைந்த சிந்துஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு பேரீச்சம் பழத்தில் எலிமருந்து கலந்து சாப்பிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தநிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது. அப்போது சிந்துஜாவின் உறவினர்கள் மற்றும் அவருடன் படிக்கும் சக மாணவர்கள் உடலை வாங்க மறுத்து ஆம்புலன்சின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். சிந்துஜாவின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் உள்ள பயிற்சி மையத்தில் சிந்துஜா படித்துக் கொண்டிருந்த போது அவருக்கும், ராம்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த சில மாதங்களாக சிந்துஜா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சிந்துஜாவின் ஏழ்மையை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்துள்ளனர். இதில் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். 

Next Story