அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி
திருப்பரங்குன்றம் தொகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள், இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
திருப்பரங்குன்றம்,
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில் 5 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கும் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி வருவாய்துறை அமைச்சரும், பேரவையின் மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி. சேவூர்ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்தியலிங்கம் கலந்து கொண்டு கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க.விற்கு அன்று முதல் இன்று வரை மதுரை மக்கள் துணையாக இருந்து வருகிறார்கள். அ.தி.மு.க.வில் எத்தனையோ பிளவுகள் சோதனைகள் வந்தாலும் அதனை எம்.ஜி.ஆர் முறியடித்தார். அவருக்கு பிறகு கட்சியை பிளவு படுத்தினார்கள். அதை ஜெயலலிதா முறியடித்து கட்சியை கட்டிக்காத்தார். இந்த கட்சியில் சில சேதாரங்கள் இருக்கலாம். ஆனால் யாரலும் சேதப்படுத்த முடியாது. மு.க.ஸ்டாலின், தினகரன், ரஜினி மற்றும் கமல் போன்றவர்களால் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்து விட முடியாது. இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம். மக்களும் இரட்டை இலைக்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். இடைத்தேர்தலுக்கு பிறகு சுண்டக்காய் கட்சிகள் எல்லாம் காணமால் போய் விடும். தலைவர், செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்க மாட்டார். ஜெயலிலதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவை போலவே கட்டுப்பாடுடன் கட்சியை வழி நடத்தி வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் ஊழலின் ஊற்று என்று தன்னை பற்றி தெரியாமலே அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்கிறார். ஊழல் குற்றச்சாட்டு சொல்லலாம். அதை நிருபிக்க வேண்டும்.
ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டால் தினகரன் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார். திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியில் சத்தியம் தர்மம் உண்மை வெற்றி பெறும். அ.தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு தினகரனுக்கு வேலையே இருக்காது. தி.மு.க. அதலபாதாளத்திற்கு போய் விடும் என்றார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும் போது கூறியதாவது:-
ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் இளைஞர் பட்டாளம் சைக்கிளில் சென்று மக்களை சந்தித்து வருகிறது. திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதும் புறப்பட்டுள்ள இளைஞர்கள் வாக்காளர்களை நேரில் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கி பேசுவார்கள். இதன் மூலம் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். திருப்பரங்குன்றம் தொகுதி கடந்த இடைத்தேர்தலில் வாக்கு அளித்தது போல் எய்ம்ஸ் மருத்துவமனை, துணைகோள் நகரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் அ.தி.மு.க.வை வீழ்த்த யாராலும் முடியாது என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பங்கேற்றவர்கள் எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், முத்துராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், புறநகர் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிர்வாகிகள் சாலைமுத்து ஒ.எம்.கே.சந்திரன், நிலையூர் முருகன், முத்துக்குமார், ஏ.கே.பி.சிவசுப்பிரமணி திருப்பரங்குன்றம் பகுதி துணை செயலாளர் ஐ.பி.எஸ்.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணி திருப்பரங்குன்றம் தனக்கன்குளத்தில் தொடங்கி, முருகன் கோவில், அவனியாபுரம், வில்லாபுரம், ரிங்ரோடு வழியாக சிலைமானை சென்றடைந்தது. சைக்கிள் பேரணியில் சென்றவர்கள் தொகுதியில் உள்ள வாக்காளர்களை சந்தித்து அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி முழக்கமிட்டு சென்றனர்.
Related Tags :
Next Story