கொள்ளிடம் அணையில் உடைப்பு, மணல் மூட்டைகளால் நீர்க்கசிவை தடுத்து நிறுத்தும் பணி தீவிரம்


கொள்ளிடம் அணையில் உடைப்பு, மணல் மூட்டைகளால் நீர்க்கசிவை தடுத்து நிறுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 13 Sep 2018 11:00 PM GMT (Updated: 13 Sep 2018 10:20 PM GMT)

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில், மணல் மூட்டைகளால் நீர்க்கசிவை தடுத்து நிறுத்துவதற்கான இறுதி கட்ட பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருச்சி,

45 மதகுகளை கொண்ட திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையின் 9 மதகுகள் கடந்த மாதம் 22-ந்தேதி வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் சுமார் 120 மீட்டர் அளவில் உடைப்பு ஏற்பட்ட பகுதியின் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறியது.

மதகுகள் உடைந்த இடத்தில் தற்காலிக சீரமைப்பு பணிகள் ரூ.95 லட்சம் திட்ட மதிப்பீட்டில் நடந்து வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரவு, பகலாக கொள்ளிடம் ஆற்றுக்குள் மணல் மூட்டைகளை அடுக்கியும், பெரிய பாறாங்கற்களை கொட்டியும் சீரமைப்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

ஆனாலும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கொட்டப்பட்டுள்ள பாறாங்கற்களில் உள்ள இடைவெளிகளின் வழியாக தண்ணீர் வெளியேறி செல்வதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியவில்லை. நீர்க்கசிவை தடுத்து நிறுத்த கரும்பு சக்கைகள், வாழைச்சருகுகளை பயன்படுத்தி அடைத்தனர். ஆனாலும் தண்ணீர் தொடர்ந்து வெளியேறிக்கொண்டு தான் இருக்கிறது. எனவே ஆற்றுக்குள் நீரோட்டம் அதிகமாக உள்ள பகுதியில் தற்போது மணல் மூட்டைகளை பயன்படுத்தி, நீர்க்கசிவை தடுத்து நிறுத்தும் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உடைப்பு ஏற்பட்ட பகுதியில் ஏற்கனவே 3 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. அவற்றுடன் சேர்த்து மேலும் கூடுதலாக 3 லட்சம் மணல் மூட்டைகளை அடுக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட மதகுகள் போக மீதம் உள்ள மதகுகள் மற்றும் அதனுடன் இணைந்த பாலம் பகுதி மேலும் சேதம் அடையாமல் இருப்பதற்காக அதன் மேல் பகுதியில் செங்கற்கள் மூலம் தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் முக்கொம்பில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் முக்கொம்பு மேலணையில் தண்ணீர் கடல் அலைபோல் பெருக்கெடுத்து ஓடுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

Next Story