கூடுதல் தண்ணீர் திறப்பு: 65 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால், அணை நீர்மட்டம் 65 அடியாக குறைந்தது.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இதன் மொத்த நீர்மட்ட உயரம் 71 அடி. தென்மேற்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் முழு கொள்ளளவான 69 அடியை எட்டியது. மேலும் அணைக்கு வந்த உபரிநீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே வைகை அணையில் இருந்து மதுரை, திருமங்கலம், மேலூர் பகுதி பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் திறந்த போதிலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை அணையின் நீர்மட்டம் 20 நாட்களுக்கும் மேலாக முழு கொள்ளளவிலேயே நிலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து ஆற்று வழியாக 18 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. 18 நாட்களில் மொத்தம் 1,560 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதனையடுத்து வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. பல நாட்களாக முழு கொள்ளளவில் நீடித்து வந்த வைகை அணை நீர்மட்டம் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் வைகை அணையின் நீர்மட்டம் 4 அடி குறைந்து 65 அடியாக உள்ளது. மேலும் அணையில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
வைகை அணை நீர்மட்டம் 67 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே 58-ம் கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 58-ம் கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவ மழையால் வைகை அணை நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டினால் மட்டுமே 58-ம் கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கமுடியும்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 65.67 அடியாகவும், பிற்பகலில் 65 அடியாகவும் குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 1,564 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், அணையில் இருந்த பாசனத்திற்கு வினாடிக்கு 1,900 கன அடியும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 510 கனஅடி, மதுரை மாநகர குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 60 கனஅடி என மொத்தம் வினாடிக்கு 2 ஆயிரத்து 470 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 4 ஆயிரத்து 778 மில்லியன்கனஅடியாக இருந்தது.
Related Tags :
Next Story