பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்


பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2018 4:17 AM IST (Updated: 14 Sept 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மேலும் 123 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள கச்சேரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அனுக்ஞை, கலசபூஜை, மகா கணபதி ஹோமம், திரவியஹோமம் மற்றும் அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலையில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

பெரம்பலூர் நகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில், கடைவீதியில் தேரடி, காந்திசிலை அருகே உள்ள செல்வ விநாயகர் கோவில், எளம்பலூர் சாலையில் மேட்டுத்தெரு, மேரிபுரம் அருள்சக்தி விநாயகர் கோவில், துறையூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் பாலமுத்துமாரியம்மன் கோவில், இந்திராநகர், பெரியார்நகர், வடக்குமாதவி சாலையில் உள்ள சவுபாக்கியவிநாயகர் கோவில், சங்குப்பேட்டை பகுதி, வெங்கடேசபுரம் மற்றும் எளம்பலூர் சாலையில் ஆர்.எம்.கே.நகரில் 12 அடி உயர வீர விநாயகர் சிலை உள்பட 23 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவில், விநாயகர் சன்னதி, நான்கு ரோடு அருகே மின்வாரிய குடியிருப்பில் உள்ள விநாயகர் கோவில், தீரன்நகரில் உள்ள விநாயகர்கோவில், சிதம்பரம் நகரில் உள்ள பாலமுத்துகுமாரசாமி கோவில், சிவன் கோவில் பிரகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதி, கடைவீதியில் உள்ள ராஜகணபதி கோவில் ஆகியவற்றில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும், மகா தீப ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் பிரும்ம ரிஷி மலை அடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோவிலில் செல்வ மகா வெற்றி கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதனைத்தொடர்ந்து உலகநன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தன தானியம் பெருகிடவும் 210 சித்தர்கள் யாகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்னை சித்தர் ராஜ்குமார் குருஜி பக்தர்களுக்கு மோதகம் மற்றும் கொழுக்கட்டை வழங்கினார்.

எளம்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள சிங்கவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க தலைவர் ஓம்சக்தி உதயகுமார் தலைமையில், சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்கள், என்ஜினீயரிங், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், சிட்கோ தொழிற்பேட்டையை சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள ஸ்ரீமகாலிங்க சித்தர் ஆசிரமத்தின் சார்பில், எளம்பலூர் மகாலிங்க சித்தர் சுவாமி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தயாளன் சுவாமி தலைமையில் கணபதிஹோமம், அபிஷேக ஆராதனைகளும் நடந்தது. மதியம் அன்னதானமும், மாலை சிறப்பு பூஜையும் நடந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் மற்றும் பெரம்பலூர் தாலுகா என மொத்தம் 123 இடங்களில் விநாயகர் சிலைகள் அலங்கரித்துவைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பெரம்பலூரில் 29-வது ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் இந்து முன்னணி சார்பில் நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் நடக்கிறது. திருச்சி கோட்ட தலைவர் கரூர் கனகராஜ் ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார். இந்த ஊர்வலம் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு காமராஜர் வளைவு, வடக்குமாதவி சாலை, சாமியப்பாநகர், எளம்பலூர் சாலை, காமராஜர் சிக்னல், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக சென்று காந்தி சிலையை அடைகிறது. சேகரிக்கப்படும் விநாயகர் சிலைகள் அதன் பிறகு திருச்சிக்கு வேன்களில் எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளதால், பக்தர்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை வேனில் சேர்ப்பிக்கலாம் என்று இந்து முன்னணி கோட்ட செயலாளர் குணா தெரிவித்தார்.

லெப்பைக்குடிக்காட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகருக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் லெப்பைக்குடிக்காடு, பென்னக்கோணம், கீழக்குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து கலந்து கொண்டது மத ஒற்றுமையை பிரதிபலித்தன.

இதேபோல் அத்தியூர், ஒகளூர், அகரம்சீகூர், பென்னக்கோணம், எறையூர், திருமாந்துறை, வாலிகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

Next Story