பெட்ரோல்- டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
பெட்ரோல்- டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று, காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு பொதுச் செயலாளர் பூபதிராஜா, பாபநாசம் சட்டமன்ற தொகுதி மாவட்ட துணைத்தலைவர் ரெங்கராஜன், தெற்கு வட்டார தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட விவசாய பிரிவு தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்று பேசினார். முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டு பேசினார். விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார், மாநில மகளிரணி தலைவி ஜான்சிராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காங்கிரஸ் கட்சியில் அதிகமான உறுப்பினர்களை சேர்த்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி ராகுல்காந்தி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய பாடுபட வேண்டும், விவசாயிகளின் நிலை கருதி உடனடியாக அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும். ராஜஸ்தான், ஆந்திரா, மேற்குவங்காள அரசுகள் பெட்ரோல்- டீசல் மீதான வரியை குறைத்து உள்ளது. எனவே தமிழக அரசும் பெட்ரோல்- டீசல் மீதான வரியை நீக்க வேண்டும்.
மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாததால் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. எனவே உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். கும்பகோணம்- அணைக்கரை கொள்ளிடம் பாலம் பழுதடைந்துள்ளதால் வாகனங்கள் மாற்று வழியான நீலத்தநல்லூர்- மதனத்தூர் கொள்ளிடம் பாலம் வழியாக செல்கிறது. எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. எனவே நீலத்தநல்லூர்- மதனத்தூர் சாலையை அகலப்படுத்த வேண்டும். கும்பகோணம் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் திடீரென வீடு, கட்டிடங்களுக்கான வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story