பெண்ணிடம் 4 பவுன் நகை பறித்த வாலிபர் கைது
ஊத்துக்குளி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.
ஊத்துக்குளி,
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ பொன்னாபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மனைவி பாப்பாத்தி (வயது42) இவர் தனது ஸ்கூட்டரில் சிட்கோவிலிருந்து ஊத்துக்குளி ரெயில் நிலையம் செல்லும் சாலையில் தனது உறவினர் ஞானசெல்வியுடன் கடந்த 7-ந்தேதி வந்து கொண்டிருந்தார்.
ஸ்கூட்டரை பாப்பாத்தி ஓட்ட ஞான செல்வி பின்னால் அமர்ந்திருந்தார். கிருஷ்ணா நகர் பகுதியை கடந்து சென்று கொண்டிருந்த போது இவர்களுக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த வாலிபர் இவர்களது வாகனத்தை முந்துவது போல் அருகில் வந்து பாப்பாத்தி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடியை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றார்.
இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையில் போலீசார் கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்தார். அவரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது கடந்த 7-ந்தேதி சிட்கோ அருகே பெண்ணிடம் நகை பறித்தது அவர்தான் என தெரியவந்தது.
மேலும் அவர் சேலம் மாவட்டம் ஜாகிர்அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் ஹரிஹரசுதன் (30) என்பதும் கடந்த சில மாதங்களாக நல்லூர் அருகே தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு செல்வதாக கூறி வந்துள்ளார். இவர் மீது சேலம் மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக தெரிவித்த ஊத்துக்குளி போலீசார் இவரிடமிருந்து 4 பவுன் தாலிக்கொடியை பறிமுதல்செய்தனர். இவரை கைது செய்த போலீசார் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story