விநாயகர் சிலை ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்- கல் வீசி தாக்குதல்


விநாயகர் சிலை ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்- கல் வீசி தாக்குதல்
x
தினத்தந்தி 14 Sept 2018 5:20 AM IST (Updated: 14 Sept 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் மந்தைவெளி பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று காலையில் ஒரு தரப்பினர் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

ஆத்தூர்,

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து இரவு 9 மணியளவில் விநாயகர் சிலை மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக சரக்கு ஆட்டோவில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

இந்த ஊர்வலம் மந்தைவெளி மற்றும் மாரியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களை கடந்து நடுபெரியார் தெரு அருகே சென்றது. அப்போது அந்த பகுதியில் நின்ற மற்றொரு தரப்பினர் திடீரென ஊர்வலமாக சென்றவர்கள் மீது கற்களை தூக்கி வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது கற்கள் விழவில்லை.

இதனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் ஆத்திரம் அடைந்து, மற்றொரு தரப்பினரில் கற்கள் வீசிய நபர்களிடம் ஏன்? இவ்வாறு செய்தீர்கள் என கேட்டனர். இதையடுத்து இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் உருட்டு கட்டை, கற்கள் ஆகியவற்றை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்த தாக்குதலில் ஊர்வலத்தில் சென்ற ராஜமாணிக்கம், ராஜா உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். மற்றொரு தரப்பை சேர்ந்த ஆத்தூர் நகரசபை முன்னாள் தலைவர் உமாராணி, அவருடைய கணவர் பிச்சை கண்ணன், மகன்கள் விக்ரம், வினோத் மற்றும் ரேணுகா, விமல்ராஜ், மீனா, பிரியா உள்பட 13 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த மோதலில் இருதரப்பை சேர்ந்த மொத்தம் 19 பேர் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து இருதரப்பை சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு இருதரப்பினர் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது.

இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பொன் கார்த்திக்குமார், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அங்கு கூடியிருந்தவர்களை போலீசார் விரட்டினர். இந்த மோதல் சம்பவத்தால் விநாயகர் சிலை ஊர்வலம் பாதியில் நின்றது. இதனால் விநாயகர் சிலை எடுத்து சென்ற வாகனம் மாரியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பகுதியில் பதற்றத்தை தணிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story