ஆத்தூரில் சமையல் எண்ணெய் பாக்கெட்டில் எலி செத்து கிடந்ததால் பரபரப்பு


ஆத்தூரில் சமையல் எண்ணெய் பாக்கெட்டில் எலி செத்து கிடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Sept 2018 6:00 AM IST (Updated: 14 Sept 2018 5:28 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் சமையல் எண்ணெய் பாக்கெட்டில் எலி செத்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் கிராமத்தை சேர்ந்த குமரவேல் என்பவர் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள ஒரு மளிகை கடையில், சமையல் செய்வதற்காக கடலை எண்ணெய் ஒரு லிட்டர் பாக்கெட் வாங்கினேன். அதை வீட்டிற்கு கொண்டு சென்று பிரித்து பார்த்தபோது அதில் எலி ஒன்று செத்து கிடந்தது. இந்த எண்ணெய் ஆத்தூர் உடையார்பாளையத்தில் ஒரு எண்ணெய் ஆலையில் தயாரிக்கப்பட்டது ஆகும், இதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இதையடுத்து டாக்டர் மாரியப்பன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று அந்த மளிகை கடை மற்றும் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் ஆலையில் ஆய்வு செய்தனர். இதில் சமையல் எண்ணெய் தயாரிக்கும் ஆலை சுகாதாரமற்ற முறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கிருந்த 1,100 லிட்டர் கடலை எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாதிரி எண்ணெய் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் எண்ணெய் தரமற்ற முறையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் எண்ணெய் தயாரிக்கும் ஆலைக்கு சீல் வைக்கப்படும். தற்போது எச்சரிக்கும் விதமாக உரிமையாளர் கணேசனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தெரிவித்தார்.

சமையல் எண்ணெய் பாக்கெட்டில் எலி செத்து கிடந்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story