சேலம் காசி விஸ்வநாதர் கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் சாமி சிலையை வீசியதால் பரபரப்பு


சேலம் காசி விஸ்வநாதர் கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் சாமி சிலையை வீசியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Sept 2018 5:33 AM IST (Updated: 14 Sept 2018 5:33 AM IST)
t-max-icont-min-icon

சேலம் காசி விஸ்வ நாதர் கோவிலில் அர்த்த நாரீஸ்வரர் சாமி சிலையை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலையை வீசிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்,

தமிழகம் முழுவதும் பல கோவில்களில் உள்ள பழமையான ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், கோவில்களில் திருட்டு போன சாமி சிலைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான விசாரணையில், பல்வேறு கோவில்களில் இருந்து சாமி சிலைகள் அதிகளவில் திருடப்பட்டு இருப்பதும், இத்தகைய செயல்களுக்கு அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சிலை கடத்தல் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சேலத்தில் உள்ள கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் சாமி சிலையை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் டவுன் மணல் மார்க்கெட் அருகே மிகவும் பழமையான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு நடராஜர் சன்னதி அருகே பேப்பரில் சுற்றப்பட்ட நிலையில் பொருள் ஒன்று கிடந்தது. இதனை இரவு காவலாளி பாஸ்கர் என்பவர் பார்த்தார். பின்னர் அவர் அந்த பேப்பரை அகற்றியபோது, ஒரு அடி உயரம் கொண்ட பழமையான அர்த்தநாரீஸ்வரர் சாமி சிலை இருந்தது. உடனடியாக அவர் இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழரசுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் அவர் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சிலையை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த சிலை 2 கிலோ 178 கிராம் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் விரைந்து சென்று சிலை தொடர்பாக விசாரணை நடத்தினர். எந்த பகுதியில் சிலை கிடந்தது? அது ஐம்பொன் சிலையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஒரு அடி உயரம் கொண்ட அர்த்தநாரீஸ்வரர் சிலை எப்போதாவது திருட்டு போனதா? என விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் கோவிலில் சிலை எதுவும் திருட்டு போகவில்லை என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் காசிவிஸ்வநாதர் கோவிலில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனால் கோவிலுக்குள் சிலையை வீசி சென்ற மர்ம நபர்களின் உருவம் ஏதேனும் பதிவாகியிருக்கலாம் என்று போலீசார் முடிவு செய்து அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும், இந்த சிலை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது? சிலை கடத்தலில் ஈடுபட்டவர்கள் சேலத்தை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூர் நபர்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது நெருக்கடியின் காரணமாக கடத்தல் ஆசாமிகள், தங்களை போலீசார் பிடித்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் சிலையை வீசிசென்றிருக்கலாம். ஐம்பொன்னால் செய்யப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலையா? என்பது குறித்து தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு தான் தெரியும். இதனால் அவர்களை வரவழைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எப்படியும் சேலத்தில் உள்ள சிலை கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

Next Story