விநாயகர் சதுர்த்தியையொட்டி நாமக்கல் கோவில்களில் சிறப்பு பூஜை


விநாயகர் சதுர்த்தியையொட்டி நாமக்கல் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 14 Sept 2018 6:01 AM IST (Updated: 14 Sept 2018 6:01 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தியை யொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 622 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

நாமக்கல்,

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் 622 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர்.

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டது. பின்னர் சாமி விஸ்வரூப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

நாமக்கல் செங்கழநீர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஆர்ய வைஸ்ய நந்தவனத்தில், தண்ணீரில் உள்ள 5 தலை நாகபாம்பின் தலை மீது விநாயகர் நடனம் ஆடுவது போன்ற சிலை வைக்கப்பட்டு இருந்தது. இங்கு காலையில் மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. மாலையில் மூலவருக்கு மாதுளை முத்துக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தாமிரபரணிதட புஷ்கரணி நிருத்ய கணபதி சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இதேபோல் கடைவீதி சக்தி விநாயகர் முத்தங்கி அலங்காரத்திலும், கோட்டை வல்லப லட்சுமி கணபதி சந்தனகாப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நாமக்கல் கணேசபுரம் விநாயகர் கோவிலில் நடராஜர் நடனம் ஆடுவது போன்ற தோற்றத்தில் சிலை வைக்கப்பட்டு இருந்தது. மேலும் சதுர்த்தியையொட்டி நகர் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கந்தம்பாளையம் விநாயகர் கோவிலில் சாமிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் நகரை பொறுத்தவரையில் குளக்கரை திடல், குப்பண்ணன் தெரு, குட்டை தெரு, தட்டார தெரு உள்பட 13 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதுதவிர பொதுமக்கள் சார்பில் 55 இடங்களில் சிலை வைக்கப்பட்டு, பூஜை நடத்தப்பட்டது. நாமக்கல் நல்லிப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி காளை மீது அமர்ந்த விநாயகருக்கு ரூபாய் நோட்டு, மலர்கள் மற்றும் அருகம்புல் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 622 இடங்களில் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, வழிபாட்டிற்காக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story