கடல் அரிப்பால் சாலை முற்றிலும் சேதம்: 6 ஆண்டுகளாக 15 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் மீனவ மக்கள்


கடல் அரிப்பால் சாலை முற்றிலும் சேதம்: 6 ஆண்டுகளாக 15 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் மீனவ மக்கள்
x
தினத்தந்தி 14 Sept 2018 6:11 AM IST (Updated: 14 Sept 2018 6:11 AM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை அருகே கடல் அரிப்பால் சாலை முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் கடந்த 6 ஆண்டுகளாக 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்லும் மீனவ மக்கள் கடும் சிரமப்படுகிறார்கள். இதனை மாவட்ட நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நித்திரவிளை,

குமரி மாவட்டம் 42 கடற்கரை கிராமங்களை கொண்டது. முன்சிறை ஊராட்சிக்கு உட்பட்ட தூத்தூர், இரையுமன்துறை, பூத்துறை, சின்னதுறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி என 8 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த மக்களின் முக்கிய வாழ்வாதாரம் மீன்பிடி தொழிலாகும்.

பொதுவாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை மாதங்களில் பொழிவது வழக்கம். அவ்வாறு பருவ மழை பெய்யும்போது, கேரளாவையொட்டி உள்ள குமரி மாவட்டத்திலும் மழையும், காற்றும் அதிகமாக காணப்படும். அப்போது காற்றின் வேகம் அதிகரிப்பால் கடல் சீற்றம் அதிகமாக ராட்சத அலைகள் எழுந்து ஆவேசத்துடன் கரையை கடக்கும். இந்த அலைகளின் சீற்றத்தால் கரைப்பகுதிகளில் உள்ள மணல் பரப்பு அரிக்கப்படுவது தற்போது வழக்கமான ஒன்றாகி விட்டது. அலையின் சீற்றத்தால் மீனவ கிராமங்களில் கரையோரம் உள்ள மீனவர்களின் வீடுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள். மேலும், கட்டுமரங்களில் சென்று தொழில் செய்வது குறைந்தது. கடலரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அலை தடுப்பு சுவர் எழுப்பப்பட்டது. இதனால் கரைமடி தொழிலும் குறைந்தது.

இரையுமன்துறை முதல் நீரோடி வரை கடற்கரை கிராம சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குண்டும் குழியுமாக காணப்பட்டது. மீனவ மக்களின் பல கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகு சின்னதுறை முதல் சாலை சீரமைக்கப்பட்டது.

இந்தநிலையில் சீரமைக்கப்பட்ட சாலையும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் கடல் சீற்றத்தால் இடப்பாடு பகுதியில் சாலை அரித்துச் செல்லப்பட்டது. ராட்சத அலைகளால் படிப்படியாக அரிக்கப்பட்டுள்ளதுடன் சாலை இருந்த இடமே இப்போது தெரியவில்லை. இடப்பாடு முதல் வள்ளவிளை வரை சுமார் 4 கிலோ மீட்டர் வரை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 6 ஆண்டுகளாக அந்த சாலை வழியாக சென்ற மார்த்தாண்டம்-நீரோடி, நாகர்கோவில்-நீரோடி, மதுரை-நீரோடி ஆகிய வழித்தடங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் மீனவ மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் சார்பில் பல முறை மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதேபோல், தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளிடமும் மனுக்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், இதுவரை சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட மீனவ கிராம மக்கள் சின்னத்துறையில் இருந்து வள்ளவிளை, நீரோடி போன்ற கடற்கரை கிராமங்களுக்கு செல்ல பல கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 6 ஆண்டுகளாக சாலை வசதியின்றி தினமும் 15 கிலோமீட்டர் சுற்றி நீரோடி, வள்ளவிளை பகுதிக்கு சென்று வருகிறோம். கலெக்டர்களும், அதிகாரிகளும் மாறி விட்டார்கள். ஆனால் இந்த சாலைக்கு ஒரு மாற்றம் வரவில்லை. இதனால் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளோம். எங்களின் நிலையை கண்ட ஒரு சிலர், அவசர தேவைக்காக தங்களின் பட்டா நிலத்தில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்றவை செல்லும் வகையில் வழிகளை அமைத்து கொடுத்துள்ளனர். எனவே துண்டிக்கப்பட்ட சாலையை சரிசெய்து மீண்டும் அந்த வழியாக பஸ் போக்குவரத்தை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story