சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை


சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 Sept 2018 6:17 AM IST (Updated: 14 Sept 2018 6:17 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் வெடி விபத்து ஏற்பட்டு 3 பேர் இறந்த சம்பவத்தில் வெடித்தது தடை செய்யப்பட்ட சீன வெடிகளாக இருக்கலாம் என்று சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி,

ஈரோட்டில் பட்டாசு பண்டல்களை இறக்கி வைக்கும் போது வெடி விபத்து ஏற்பட்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கார்த்திக்ராஜா, செந்தூர்பாண்டியன், முருகன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மாரியப்பன், ஆசைதம்பி, ரத்தினகிரி ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சில வாரங்களாக சீனாவில் தயாரிக்கப்பட்ட 3 வகையான பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் விரும்பி வாங்கும் பொருட் களை விற்பனை செய்யும் கடைகளில் தற்போது இந்த ஆபத்தான சீன பட்டாசுகள் விளையாட்டு பொருட்கள் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட வெங்காய வெடியின் தோற்றத்தை போல் ‘பாப்- பாப்’ என்ற பெயரில் சீன பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஆபத்தான பட்டாசுகளின் விலை மிகவும் மலிவு. இது மற்ற பட்டாசுகளை போல் நெருப்பு வைத்து வெடிப்பது இல்லை. தூக்கி எறிந்தாலே பயங்கர சத்தத்துடன் தீ பிழம்புடன் வெடிக்கும் வகையை சேர்ந்தவை.

இந்த வகை பட்டாசு குறைந்த விலையில் கிடைப்பதால் வியாபாரிகளும் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு அதிகம் வாங்கி விற்பனை செய்து வருகிறார்கள்.

எந்த நாட்டில் இருந்தும் இந்தியாவுக்கு பட்டாசு இறக்குமதி செய்ய அனுமதி கிடையாது ஆனால் சீன பட்டாசுகள் அதிகஅளவில் கள்ளத்தனமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஈரோட்டில் நடைபெற்ற விபத்தில் பட்டாசு வெடித்தது என்று அறிக்கை தரப்பட்டுள்ளது. அந்த பட்டாசு எங்கு தயாரிக்கப்பட்டது? உரிய அனுமதி பெற்று தயாரிக்கப்பட்டதா? அதில் உரிய வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டதா? அல்லது இந்திய அரசால் தடை செய்யப்பட்ட வெடி பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டதா? என்று அரசு தீவிர விசாரணை நடத்தி மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

ஈரோட்டில் வெடி விபத்து ஏற்பட்டவுடன் பட்டாசு வெடித்து 3 பேர் பலி என்று தான் செய்தி பரவுகிறது. ஈரோட்டில் வெடி விபத்தில் வெடித்தது எந்த வகை பட்டாசு? இதை யார் தயாரித்தது? என்று போலீசார் கண்டறிந்து தவறு நடந்து இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்து குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story