தவளக்குப்பம் பகுதியில் துப்புரவு பணிகளை உள்ளாட்சித்துறை இயக்குனர் ஆய்வு


தவளக்குப்பம் பகுதியில் துப்புரவு பணிகளை உள்ளாட்சித்துறை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Sept 2018 6:30 AM IST (Updated: 14 Sept 2018 6:30 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநில கவர்னரின் உத்தரவை ஏற்று புதுவை அரசின் உள்ளாட்சித்துறை இயக்குனர் நேற்றுக்காலை தவளக்குப்பம் பகுதியில் நடைபெறும் துப்புரவு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாகூர்,

புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி கடந்த 9-ந் தேதி கண்தானம், ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து தவளக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். அப்போது பூரணாங்குப்பம் பகுதியில் அவர் சென்றபோது அங்கு குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதை கண்டார். அதுகுறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் கவர்னர் கேள்விகள் எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து துப்புரவு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், விடுமுறை நாட்களிலும் இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், காவல்துறை, தீயணைப்புத்துறை போல் உள்ளாட்சி துறை அதிகாரிகளும் விடுமுறை நாட்களில் பணியாற்றி சுழற்சி முறையில் விடுப்பு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கவர்னர் கிரண்பெடியின் உத்தரவையடுத்து விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளான நேற்று உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன், தவளக்குப்பம் மற்றும் பூரணாங்குப்பம் பகுதியில் துப்புரவு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொது மக்களிடம் குப்பைகளை, குப்பை தொட்டிகளில் போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கலியமூர்த்தி, உதவி பொறியாளர் யுவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story