மாவட்ட செய்திகள்

வாக்காளர் பட்டியலில் முதல் தலைமுறை வாக்காளர்களை 100 சதவீதம் சேர்க்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு + "||" + Collector's order to officers

வாக்காளர் பட்டியலில் முதல் தலைமுறை வாக்காளர்களை 100 சதவீதம் சேர்க்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

வாக்காளர் பட்டியலில் முதல் தலைமுறை வாக்காளர்களை 100 சதவீதம் சேர்க்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த முதல்தலைமுறை வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் 100 சதவீதம் சேர்க்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த முதல் தலைமுறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் 100 சதவீதம் சேர்ப்பது குறித்து கல்விக்குழுக்களின் கல்லூரி மாணவ, மாணவிகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் 105 கலை அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் தேர்தல் கல்விக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரியிலும் தேர்தலில் போதிய அனுபவம் உள்ள ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கல்லூரியில் உள்ள மாணவர் பிரதிநிதி, பொறுப்பு அலுவலருக்கு உதவி செய்யும் வகையில் நியமிக்கப்பட்டு தேர்தல் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 18 மற்றும் 19 வயது நிரம்பியவர்கள் 1,39,964 பேர் உள்ள நிலையில், வாக்களிக்க கூடியவர்களின் எண்ணிக்கை 10,002 என மிக குறைந்த அளவே காணப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் விடுபட்ட இவர்களில் பெரும்பாலும் கல்லூரியில் படிப்பவர்கள். இந்த பயிற்சியில் கலந்துகொண்ட பொறுப்பு அலுவலர்கள் மற்றும் வளாக தூதுவர்கள் தங்களுடைய கல்லூரி கல்வி நிறுவனங்களில் பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவ, மாணவிகளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வேலூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து 100 சதவீதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற நிலையை அடைய தேர்தல் கல்விக்குழுக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

மேலும் மாவட்டத்தில் உள்ள 13 வட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் தாசில்தார்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று இதேபோன்ற பயிற்சியை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும் கல்லூரியில் தகுதிவாய்ந்த மாணவ-மாணவியர்களின் பெயர்களை சேர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், தேர்தல் தாசில்தார் பாலாஜி, அனைத்து மண்டல அலுவலர்கள், தாசில்தார்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.