குற்றங்களை தடுப்பது குறித்து கவர்னருடன் போலீஸ் டி.ஜி.பி. ஆலோசனை


குற்றங்களை தடுப்பது குறித்து கவர்னருடன் போலீஸ் டி.ஜி.பி. ஆலோசனை
x
தினத்தந்தி 14 Sept 2018 6:43 AM IST (Updated: 14 Sept 2018 6:43 AM IST)
t-max-icont-min-icon

குற்றங்களை தடுப்பது குறித்து கவர்னர் கிரண்பெடியுடன் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடியை போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நேற்று கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் புதுவை காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தனர்.

குறிப்பாக குற்றத்தடுப்பு, நுண்ணறிவு, உள்ளூர் போலீசாருடன் இணைந்து விழாக்காலங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுதல், பார்க்கிங் வசதி செய்து தருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்துதல் குறித்தும் பேசினார்கள்.

மேலும் சாலை பாதுகாப்பு, விபத்துகளை தடுத்தல், தகவல் தொடர்புகளை ஒழுங்குபடுத்துதல், போக்குவரத்து மேலாண்மை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. காவல் பணிக்கான தேர்வு மற்றும் பயிற்சிகளுக்கு தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் வழிகாட்டுதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையே சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

அரசு மானியம் எதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறதோ அதற்காக மட்டுமே செலவிடவேண்டும். வேறு பணிக்கு அந்த நிதி வழங்க அனுமதிக்கப்படமாட்டாது. இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி செலவினங்களில் ஆட்சேபனைகள் இருந்தால் அதிகாரிகள் பதில் தரவேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் இதை செய்யவேண்டும். இதுதொடர்பாக எப்போது கேட்கப்படுகிறதோ ஆப்போது வந்து விளக்கும் வகையில் தயாராக இருக்கவேண்டும்.

சமீபத்தில் நடந்த ஆய்வுகளின்படி நிதி கேட்கும் நிறுவனங்கள், சங்கங்களுக்கு அவற்றின் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. அவற்றில் சில ஒட்டுமொத்தமாக மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளது. நிதி ஆதாரம் குறுகியதாக இருக்கும்போது ஒவ்வொரு ரூபாயும் கணக்கிடப்படுகிறது.

இதை உணர்ந்து பொருத்தமான மேம்பாடுகளை செய்யவேண்டும். நிதி அளிப்பதற்கு முன்பு சிலவற்றில் சமூக தணிக்கைகளும் கேட்கப்படும். அதற்கும் தயாராக இருக்கவேண்டும். புதுவையில் தற்போதுள்ள நிலையை மேம்படுத்தவும், எதிர்காலத்திலும் சிறந்த நிர்வாகத்தை அளிக்க கவர்னரின் செயலகம் உள்ளது. இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

Next Story