சுருளி அருவி சாரல் விழா குறித்த ஆலோசனை கூட்டம்


சுருளி அருவி சாரல் விழா குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2018 3:00 AM IST (Updated: 14 Sept 2018 11:30 PM IST)
t-max-icont-min-icon

சுருளி அருவி சாரல் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

தேனி, 

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுருளி அருவி சாரல் விழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தேனி மாவட்டத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் சுருளி அருவி சாரல் விழா வருகிற 23, 24-ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் உடை மாற்றும் அறைகள் அமைத்தல், அருவி பகுதிகளில் கைப்பிடி சுவர்கள் அமைத்தல் என தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

மேலும், விழா மேடை அருகே வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கூட்டுறவுத்துறை, வனத்துறை, கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், சுகாதாரத்துறை, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கவேண்டும்.

மகளிர் சுய உதவி குழுக்கள் தயார் செய்யும் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நிலையம் அமைத்திட வேண்டும். செய்தி-மக்கள் தொடர்புத்துறை சார்பாக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடத்த வேண்டும். விழாவிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்க வேண்டும். பொழுதுபோக்கு அம்சங்களான கலைநிகழ்ச்சிகள் நடத்தவேண்டும். மேலும், கடந்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக அருவி பகுதியில் சேதமடைந்த பாதுகாப்பு கம்பிகள், படிக்கட்டுகளை சீரமைத்து, சுருளி அருவிக்கு செல்லும் பாதையில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, இணை இயக்குனர் (மருத்துவ நலப்பணிகள்) சரஸ்வதி, மகளிர் திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story