விளாத்திகுளம் அருகே தடுப்பு சுவரில் கார் மோதி 2 பேர் பலி கோவிலில் முடி காணிக்கை செலுத்தி விட்டு வந்தபோது பரிதாபம்


விளாத்திகுளம் அருகே தடுப்பு சுவரில் கார் மோதி 2 பேர் பலி கோவிலில் முடி காணிக்கை செலுத்தி விட்டு வந்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 15 Sept 2018 3:30 AM IST (Updated: 14 Sept 2018 11:53 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே ஓடைப்பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே ஓடைப்பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எலக்ட்ரீசியன்கள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மீனாட்சிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமபெருமாள் மகன் ஆறுமுகம் (வயது 37). எலக்ட்ரீசியனான இவர் எலக்ட்ரிக்கல் வேலைகளை ஒப்பந்த முறையில் எடுத்து செய்து வந்தார். இவருடைய மனைவி மாரிசெல்வி (28). இவர்களுக்கு கல்பனா (4) என்ற மகளும், மன்மதன் (2) என்ற மகனும் உள்ளனர்.

அதே ஊரில் கீழ தெருவில் வசித்தவர் சோலைமுத்து மகன் அழகுமுத்து (38). அதே ஊரில் நடுத்தெருவில் வசிப்பவர் முத்தையா மகன் முருகேசன் (39). எலக்ட்ரீசியன்களான இவர்கள் 2 பேரும் ஆறுமுகத்திடம் வேலை செய்து வந்தனர். ஆறுமுகம், அழகுமுத்து, முருகேசன் ஆகிய 3 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

கோவிலில் முடிகாணிக்கை செலுத்த...

ஆறுமுகம் தன்னுடைய 2 குழந்தைகளுடன் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி கோவிலில் முடி காணிக்கை செலுத்த திட்டமிட்டார். அதன்படி நேற்று காலையில் ஆறுமுகம் தன்னுடைய மனைவி, குழந்தைகளுடன் தனது காரில் இருக்கன்குடிக்கு புறப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய நண்பர்களான அழகுமுத்து, முருகேசன் ஆகியோரையும் காரில் அழைத்து சென்றார்.

இருக்கன்குடி கோவிலில் ஆறுமுகம் மற்றும் அவருடைய 2 குழந்தைகளும் முடி காணிக்கை செலுத்தினர். பின்னர் மாலையில் அனைவரும் காரில் தங்களது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். ஆறுமுகம் காரை ஓட்டிச் சென்றார்.

தடுப்பு சுவரில் மோதல்

விளாத்திகுளம்-மதுரை மெயின் ரோட்டில் தனியார் ஆலை அருகில் வைப்பாற்று தடுப்பணையில் இருந்து விளாத்திகுளம் கண்மாய்க்கு செல்லும் ஓடை செல்கிறது. அந்த ஓடைப்பாலத்தின் இடதுபக்க தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம், அழகுமுத்து ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மாரிசெல்வி, முருகேசன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்புலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீசார் விசாரணை

காயம் அடைந்த மாரிசெல்வி, முருகேசன் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த ஆறுமுகம், அழகுமுத்து ஆகிய 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் 2 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த அழகுமுத்துவுக்கு மகேசுவரி என்ற மனைவியும், கருப்பு ராஜா, முத்து மகேஷ் ஆகிய 2 மகன்களும், முத்து பானுமதி என்ற மகளும் உள்ளனர். கோவிலில் முடி காணிக்கை செலுத்தி விட்டு வந்தபோது, ஓடைப்பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story