கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு


கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
x
தினத்தந்தி 14 Sep 2018 10:45 PM GMT (Updated: 14 Sep 2018 6:26 PM GMT)

குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடந்தது. இதனை மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி நடத்தி வைத்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் நாகர்கோவில் வடிவீஸ்வரம் குழந்தைகள் மையத்தில் நாகர்கோவில் நகர்புறத்தை சேர்ந்த 160 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி தலைமை தாங்கி சமுதாய வளைகாப்பை நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:–

இந்த விழாவில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பற்றியும், தன்சுத்தம் பற்றியும், கருவுற்ற பெண்கள் கருவுற்ற காலத்தில் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டியதின் அவசியம் குறித்தும், சத்தான உணவு உட்கொள்ள வேண்டியதின் நோக்கம் பற்றியும், கருவுற்ற காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் கருவில் உள்ள குழந்தை நன்றாக வளர்ந்து 3 கிலோ எடையில் ஆரோக்கியகாக பிறக்கும் என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் கலந்து கொள்ளும் ஏழை கர்ப்பிணிகள் அனைவருக்கும் பூ, பழங்களுடன் வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டு ஐந்து வகை கலவை சாதமும் வழங்கப்படுகிறது.

இவ்விழா ஏழை கர்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 வட்டாரங்களில் ஒரு தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 50 தொகுதிகளில் ரூ.5 லட்சம் செலவில், தொகுதிக்கு 40 கர்ப்பிணிகள் வீதம் 50 தொகுதிகளில் 2000 ஏழை கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. இவ்வாறு மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி கூறினார்.

விழாவில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பேச்சியம்மாள், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் மதுசூதனன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், எருசலேம் புதிய பயண குழு உறுப்பினர் மற்றும் மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் ஜஸ்டின் செல்வராஜ் மற்றும் கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் 10 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்கள் மூலமாக 2000 ஏழை கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. இதில் நாகர்கோவில் நகரப்பகுதியில் 160 கர்ப்பிணி பெண்களுக்கும், ஊரகப் பகுதிகளில் 1840 கர்ப்பிணி பெண்களுக்கும் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

Next Story