கோவையில் வீடுகள் தோறும் சப்ளை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ‘சுவைப்’ கருவி மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம்
கோவையில் வீடுகள் தோறும் சப்ளை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு, சுவைப் கருவி மூலம் பணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக குறைதீர்ப்பு கூட்டத்தில் எரிவாயு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை,
சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் தொடர்பான நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு வழங்கல் பிரிவு அதிகாரி ஜெயராணி, பறக்கும் படை தாசில்தார் கணேசன், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன அதிகாரிகள், சமையல் எரிவாயு வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் முகவர்கள் கலந்துகொண்டனர்.
நுகர்வோர் அமைப்புகள் சார்பில் கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் என்.லோகு, பொள்ளாச்சியை சேர்ந்த இந்திராணி, அன்னூரை சேர்ந்த மாரப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நுகர்வோர் அமைப்புகள் சார்பில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. சமையல் எரிவாயு சிலிண்டர் வீடுகளுக்கு சப்ளை செய்யும்போது, எடை கருவிகள் கொண்டு சென்று சிலிண்டர்கள் எவ்வளவு எடையில் இருக்கிறது என்பதை காண்பிக்கும் கருவிகளை பெரும்பாலான வினியோகஸ்தர்கள் கடைபிடிப்பதில்லை என்றும், சமையல் எரிவாயு சிலிண்டர் தீவிபத்து ஏற்படும்போது கிடைக்கும் காப்பீட்டு தொகை விவரம் அச்சிடப்படுவதில்லை என்றும் சுட்டிக்காண்பிக்கப்பட்டது.
பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை. கிராமப்புற பகுதிகளில் சிலிண்டர்கள் பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் வைக்கப்படுகிறது. வீடுகளுக்கு சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படும்போது சிலிண்டர் விலையைவிட ஊழியர்கள் அதிக விலை கேட்பதை தவிர்க்க ‘சுவைப்’ கருவியின் மூலம் பணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் நுகர்வோர்களிடம் இருந்து அதிக தொகை பெறுவதை தவிர்க்க முடியும் என்றும் இந்த கூட்டத்தில் கூறினார்கள்.
சிலிண்டர்களுக்கான மானிய தொகை முறையாக வங்கி கணக்குகளில் செலுத்தப்படுவது இல்லை என்றும், பீளமேடு, தண்ணீர் பந்தல், சிங்காநல்லூர் உள்பட நகரின் பல பகுதிகளில் மானிய விலை சிலிண்டர்கள் டீக்கடை, பேக்கரி, தள்ளுவண்டி கடைகளில் முறைகேடாக பயன்படுத்துவதாகவும், வர்த்தக சிலிண்டர்களை வீட்டு உபயோக சிலிண்டர்களாக மாற்றி கால்டாக்சி, வாடகை வாகனங்களுக்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார் செய்யப்பட்டது.
இதற்கு பதில் அளித்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:–
கோவையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ‘சுவைப்’ கருவி மூலம் பணம் வசூலிக்கும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். தற்போது மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வினியோகஸ்தர்களுக்கு சுவைப் கருவிகள் வழங்கப்பட்டு சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அனைத்து வினியோகஸ்தர்களுக்கும் விரிவு படுத்தும்போது, ஊழியர்களிடம் சுவைப் கருவிகள் வழங்கப்பட்டு சிலிண்டர் சப்ளை செய்யப்படும்போது டெபிட் கார்டு மூலமாக பணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்படும்.
சிலிண்டர்களை வர்த்தக நோக்கத்தில் தவறாக பயன்படுத்துபவர்கள் மீது குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் மூலம் தணிக்கை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எடை அளவு கருவிகளை சிலிண்டர் சப்ளை செய்யும்போது கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படும். மானிய தொகைகள் வங்கி கணக்கில் சேராதது குறித்து மாவட்ட முன்னோடி வங்கியிடம் கலந்துபேசி குறைகள் தீர்க்கப்படும். சிலிண்டர்கள் இதுவரை இல்லாதவர்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை அந்தந்த பகுதி வினியோகஸ்தர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். சமையல் எரிவாயு சிலிண்டர் குறித்த புகார்களுக்கு 1906 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.