பெரிய பிக்கட்டி அருகே 70 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது, 4 பேர் உயிர் தப்பினர்
பெரிய பிக்கட்டி அருகே 70 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் கணவன்–மனைவி உள்பட 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஊட்டி,
சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் பிரின்ஸ்ராஜன்(வயது 27). இவருடைய மனைவி ஸ்னிக்தா(23). இவர்களது உறவினர்கள் பிரவீன்குமார்(30), ஜீனிஷ் தாகூர்(23). இந்த நிலையில் பிரின்ஸ்ராஜன் உள்பட 4 பேரும் ஊட்டிக்கு சுற்றுலா வர திட்டமிட்டனர். அதன்படி நேற்று காலை சென்னையில் இருந்து ஊட்டிக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை பிரின்ஸ்ராஜன் ஓட்டினார். குன்னூர்– ஊட்டி சாலையில் பெரிய பிக்கட்டி அருகே ஒரு வளைவில் திரும்பியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 4 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அருவங்காடு பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அருவங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.