முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தரைப்பாலம் சேதம்
கூடலூர்-வெட்டுக்காடு இடையே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தரைப்பாலம் சேதம் அடைந்ததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் ஊமையன்தொழு என்று அழைக்கப்படும் வெட்டுக்காடு கிராமம் உள்ளது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வரும் இவர்களில் பலர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். இவர்களுடைய கிராமத்திற்கு செல்வதற்காக கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு முல்லைப்பெரியாற்றின் குறுக்கே ஒரு மரப்பாலம் அமைக்கப்பட்டது.
இதன் வழியாகவே இங்கு வசிக்கும் மக்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், மருத்துவ வசதிகள் உள்பட பல்வேறு தேவைகளுக்கும் கூடலூர் பகுதிக்கு சென்று வந்தனர். காலப்போக்கில் அந்த மரப்பாலம் சேதம் அடைந்தது. இதனால் அதனை அகற்றிவிட்டு இரும்பு கம்பிகளால் ஆன ஒற்றையடி பாதை போன்று சிறிய அளவிலான மேம்பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலமும் சேதம் அடைந்து விட்டது.
தற்போது ஆற்றின் குறுக்கே கடந்து செல்ல பாலம் இல்லாமல் உள்ளது. இதனால் வெட்டுக்காட்டில் இருந்து காஞ்சிமரத்துறை வழியாக சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் கடந்து கூடலூர் வரவேண்டிய நிலை உள்ளது. இந்த வழியாக காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மற்ற நேரங்களில் காஞ்சிமரத்துறை சாலை வழியாக இருசக்கர வாகனங்கள் அல்லது நடந்து வருகின்றனர். இதனால் வெட்டுக்காடு கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கூடலூர்-வெட்டுக்காடு இடையே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story