தமிழக அரசின் தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி அறிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
தமிழக அரசின் தொழிலாளர் துறை வாயிலாக 2017–ம் ஆண்டிற்கான தொழில் நல்லுறவு விருது வழங்கப்பட உள்ளது. வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத் திட்டம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. நல்ல தொழில் உறவை பேணி பாதுகாக்கும் வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017–ம் ஆண்டிற்கான சிறப்பு விருதுகளை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்புக் குழு தேர்ந்தெடுக்கும்.
இந்த விருதுக்கு தொழிலாளர் துறையின் வலைதளத்திலிருந்து விண்ணப்பிக்கலாம். அல்லது இந்த விண்ணப்பங்களை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் சென்னை தேனாம்பேட்டை வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தை இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு வருகிற அக்டோபர் 10–ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.