மாவட்ட செய்திகள்

செங்கோட்டையில் மீண்டும் பதற்றம்விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல் வீச்சு; போலீஸ் தடியடி9 பேர் காயம்-வாகனங்கள் சேதம் + "||" + Stone idol in Vinayagar idol; Police beaten 9 injured in injuries-vehicles

செங்கோட்டையில் மீண்டும் பதற்றம்விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல் வீச்சு; போலீஸ் தடியடி9 பேர் காயம்-வாகனங்கள் சேதம்

செங்கோட்டையில் மீண்டும் பதற்றம்விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல் வீச்சு; போலீஸ் தடியடி9 பேர் காயம்-வாகனங்கள் சேதம்
செங்கோட்டையில் நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்டதில் 9 பேர் காயம் அடைந்தனர். போலீஸ் வாகனங்கள் சேதம் அடைந்தன.
செங்கோட்டை, 

செங்கோட்டையில் நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்டதில் 9 பேர் காயம் அடைந்தனர். போலீஸ் வாகனங் கள் சேதம் அடைந்தன. கல் வீசியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

கலவரம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை மேலூர் பகுதியில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை ஊர்வலம் நடந்தது. அப்போது விநாயகர் சிலை மீது கற்கள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக் கப்பட்டன. உடனே போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த சம்பவத்தில் போலீசார், பொதுமக்கள் என 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

இருந்தபோதும் நேற்று 2-வது நாளாக அங்கு பதற்றம் நீடித்தது. எனவே, கலவரம் நடந்த பகுதிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது அவருடன் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், நெல்லை மாநகர துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சுகுணா சிங் ஆகியோர் வந்திருந்தனர்.

பின்னர் அவர்கள், செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறுகையில், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், வழக்கமாக எந்த இடங்கள் வழியாக ஊர்வலமாக செல்வார்களோ அந்த வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறினார்.

இந்து அமைப்பினர் ஆலோசனை

இதற்கிடையே, செங்கோட்டை மேலூரில் அனைத்து இந்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 26 ஆண்டுகளாக எந்த பகுதி வழியாக ஊர்வலம் சென்றதோ அதே பாதையில் ஊர்வலம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை அனைத்து இந்து சமுதாய கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரிடம் கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர், ஏற்கனவே சென்ற பாதையில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

இதைத்தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. செங்கோட்டை வண்டி மறிச்சம்மன் கோவில் திடல் முன்பு உள்ள ஓம் காளி திடலுக்கு வேன், லோடு ஆட்டோ, ஆட்டோக்கள் மூலம் 7 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ஊர்வலத்தை பஜ்ரங்தள அமைப்பின் மாநில பொறுப்பாளர் சரவண கார்த்திக் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டன.

வீர விநாயகர் கமிட்டி தலைவர் காளிராஜ், செயலாளர் வர்ம தர்மராஜ், உறுப்பினர்கள் கார்த்திக், கல்யாணகுமார், வேம்பு, மணிகண்டன், மாடசாமி, பேச்சிமுத்து, பா.ஜனதா கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் குமரேச சீனிவாசன், நகர தலைவர் மாரியப்பன், செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஊர்வலத்தில் சென்றனர். ஊர்வலம் செல்லும் வழியில் ஆங்காங்கே பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளும் ஊர்வலத்தில் கலந்து கொண்டன. இவ்வாறு மொத்தம் 30-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

கல்வீச்சு

ஊர்வலத்தின் முன்பு ஒரு சில இடங்களில் கலெக்டர் ஷில்பா, போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், துணை கமிஷனர் சுகுணா சிங் ஆகியோர் நடந்து வந்து பார்வையிட்டனர். ஊர்வலம் செல்வவிநாயகர் கோவில் தெரு, தாலுகா அலுவலகம், மேலூர் வழியாக பம்ப் ஹவுஸ் ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. பதிலுக்கு அவர்களும் கற்களை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அப்போதும் தொடர்ந்து கற்கள் வீசப்பட்டன. அந்த சமயத்தில் ஒரு தரப்பினர் அங்கு வேகமாக ஓடி வந்தனர். அவர்கள் அங்கு நின்ற வஜ்ரா வாகனத்தை கல்வீசி தாக்கினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இந்த கல்வீச்சு சம்பவத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். மேலும் மோட்டார் சைக்கிள் கள், கார்கள், போலீஸ் வாகனங்கள் தாக்கப்பட்டன. தகவல் அறிந்த தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் அங்கு விரைந்து வந்தார். அவரது காரும் கல்வீசி தாக்கப்பட்டது. இதில் அந்த கார் சேதம் அடைந்தது. இதையடுத்து அவர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

மீண்டும் தடியடி

பின்னர் ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மேல பஜார் பகுதியில் வந்தபோது மீண்டும் கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதில் 5-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மேல பஜார் முக்கு பகுதியில் கலெக்டர் ஷில்பா நின்று கொண்டு, ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தார். அப்போது அவரது கார் மீதும் கல்வீசப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவரது காருக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர் உசேன் காரும் கல்வீசி தாக்கப்பட்டது. மேலும் அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் மீண்டும் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை கலைத்தனர். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதன் காரணமாக அந்த பகுதி கலவர பூமி போல் காட்சி அளித்தது.

இதற்கிடையே, ஊர்வலத்தில் வந்தவர்கள் கலெக்டர் ஷில்பாவிடம் முறையிட்டனர். கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் ஊர்வலத்தை தொடர்ந்து நடத்த மாட்டோம் என்று கூறினர். அதற்கு ஷில்பா, “நீங்கள் ஊர்வலத்தை அமைதியாக நடத்துங்கள். என்ன நடந்தது என்று விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். யார் மீது தவறு இருந்தாலும் தக்கப்படி நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று உறுதி அளித்தார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மீண்டும் ஊர்வலத்தை தொடர்ந்து நடத்தினர்.

நடவடிக்கை

அதே நேரத்தில் மற்றொரு தரப்பினரும் கலெக்டர் ஷில்பாவிடம் முறையிட்டனர். கல்வீச்சில் எங்கள் தரப்பை சேர்ந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று அவர்கள் வலியுறுத்தினர். அதற்கு கலெக்டர் ஷில்பா, “எங்களை பொறுத்த வரை அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றுதான். நாங்கள் யாரிடமும் பாரபட்சம் காட்ட மாட்டோம். ஊர்வலம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சம்பவங்கள் அனைத்தும் பதிவாகி உள்ளன. அதை ஆய்வு செய்து, கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஊர்வலம் அமைதியாக நடக்க ஒத்துழைப்பு கொடுங்கள்“ என்றார். இதில் அவர்கள் சமாதானம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு, காசி கடை தெரு, கீழ பஜார், போலீஸ் நிலையம் வழியாக இரவு 7.30 மணியளவில் செங்கோட்டை நகரின் எல்லையான குண்டாற்றை வந்தடைந்தது. அங்கு ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில் ஏராளமான இந்து அமைப்பை சேர்ந்தவர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் குவிப்பு

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கல்வீச்சு சம்பவம் நடந்ததையொட்டி மீண்டும் பதற்றம் ஏற்பட்டதால், செங்கோட்டை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்ட ஓம் காளி திடல் முதல் குண்டாறு வரை போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டது.

பஸ் நிலையம், ஆட்டோ நிறுத்தம், சுற்றுலா கார் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...