செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தபோது வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தபோது வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
செங்கோட்டை,
செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தபோது வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக, ஆட்டோவில் வந்த 3 பேரை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல் குண்டு வீச்சு
செங்கோட்டையில் பதற்றத்துக்கு மத்தியில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தின்போது, மேலூர், மேல பஜார் ஆகிய பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.
இந்த ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது, நேற்று மாலை 6 மணியளவில் மேலூர் சேனைத்தலைவர் விநாயகர் கோவில் தெருவில் உள்ள சுப்பையா என்பவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்த குண்டு வீட்டின் ஜன்னல் பகுதியில் விழுந்தது. இதனால் மரக்கதவு தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து தீயை அணைத்தனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோது வீட்டில் யாரும் இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
சாலை மறியல்
ஆட்டோவில் வந்த 3 பேர், வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது. அவர்கள் பெட்ரோல் குண்டை வீசியதும் ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அந்த ஆட்டோவை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கினர்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் தாலுகா அலுவலக சந்திப்பு பகுதியில் திரண்டனர். அங்கு அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்களும் கிழிக்கப்பட்டன.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், இதுகுறித்து விசாரணை நடத்தி விரைவில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விடுவோம் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story