காசிமேட்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


காசிமேட்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Sept 2018 3:45 AM IST (Updated: 15 Sept 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

காசிமேட்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு மீனவ பகுதிகளான பவர்குப்பம், காசிபுரம் ஏ.பிளாக், பி.பிளாக் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இதனால் குடிநீர் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுபற்றி புகார் செய்தும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதையும், அதை தடுக்க இதுவரையிலும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் காசிமேடு சூரியநாராயணன் சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றி தகவல் அறிந்து வந்த காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்றனர்.

சுமார் ஒரு மணிநேரம் கழித்து மண்டல குடிநீர் வாரிய உதவி செயற்பொறியாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை இன்னும் ஒரு வார காலத்தில் சரி செய்வதாகவும், அதுவரை லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதாகவும் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story