அந்தியூர் அருகே வீடு தீப்பிடித்ததில் பணம்– நகை எரிந்து நாசம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்
அந்தியூர் அருகே வீடு தீப்பிடித்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ ஆறுதல் கூறினார்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள பீடி தொழிலாளர் காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 55). இவருடைய மகள் சாந்தாமணி (25). இவர்களுடைய வீடு அடிப்பகுதி ஓலையாலும், மேற்கூரை தகரத்தாலும் வேயப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் வீட்டின் வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் திடீரென்று வீடு தீப்பிடித்து எரிந்தது. தீயின் வெப்பம் தாங்க முடியாமல் தூங்கி கொண்டிருந்த பழனிச்சாமி, சாந்தாமணி ஆகியோர் திடுக்கிட்டு எழுந்து வெளியே ஓடிவந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 5 பவுன் நகை எரிந்து நாசம் ஆனது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீ விபத்து பற்றி அறிந்ததும் அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., தாசில்தார் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அதிகாரி முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் இ.எம்.ஆர்.ராஜா தனது சொந்த செலவில் நிவாரண உதவிகள் வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுமை வீடுகள் கட்டி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.