இளம்பெண் தற்கொலை வழக்கில் திருப்பம்: கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது


இளம்பெண் தற்கொலை வழக்கில் திருப்பம்: கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது
x
தினத்தந்தி 15 Sept 2018 5:00 AM IST (Updated: 15 Sept 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் தற்கொலை வழக்கில், அவரது கணவரே கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

திரு.வி.க.நகர்,

சென்னை திரு.வி.க. நகர் கோபாலபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34). ரெயில்வே ஊழியரான இவரும், சென்னை கொண்டித்தோப்பு வடமலை தெருவைச் சேர்ந்த கல்பனா (33) என்பவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் மயங்கி கிடந்த கல்பனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக கூறிய டாக்டர்கள், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து திரு.வி.க.நகர் போலீசார் கல்பனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கணவர் கைது

இதையடுத்து அவரது கணவர் சுரேஷிடம் விசாரித்தனர். அப்போது அவர், தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அக்கம் பக்கத்தினர் தெரிந்தால் பிரச்சினை என்பதால் மயங்கி விழுந்து விட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறினார்.

ஆனால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்ததில் அவர், மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் சுரேஷ் அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:-

கொண்டித்தோப்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் நான் வேலை செய்யும் போது, அந்த வழியாக கல்லூரிக்கு சென்ற கல்பனாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. எனது தந்தை ரெயில்வே பணியில் இருக்கும்போது மாரடைப்பால் உயிரிழந்ததால் எனக்கு ரெயில்வே பணி கிடைத்தது. பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடைபெற்றது.

நான் தொடர்ச்சியாக செல்போனில் வேறு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்ததாலும், மாலை 4 மணிக்கு பணி முடிந்தாலும் குடித்துவிட்டு நள்ளிரவில்தான் வீட்டுக்கு வருவதாலும் கல்பனா என்னிடம் தகராறு செய்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

கழுத்தை இறுக்கிக்கொலை

இதனால் கல்பனாவை கொலை செய்ய முடிவு செய்தேன். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 2 மகன்களும் பள்ளிக்கு சென்று விட்டனர். பின்னர் கல்பனாவின் கழுத்தை துணியால் ஆன பெல்டால் இறுக்கி கொலை செய்தேன்.

பின்னர் வீட்டின் உரிமையாளர் பவானி மற்றும் கீழ்தளத்தில் வசிக்கும் மஞ்சுளாவிடம் எனது மனைவிக்கு ரத்த கொதிப்பு ஏற்பட்டு மயங்கி உள்ளார் என கூறினேன். பின்னர் அவர்கள் உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். பின்னர் அங்கிருந்து பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு கல்பனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியதுடன், என் மீதும் அவர்களுக்கு சந்தேகம் வந்தது.

கழுத்து இறுக்கப்பட்டுள்ளதை கண்டு சந்தேகம் அடைந்த அவர்கள், இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசாரிடம், எனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினேன். ஆனால் அவர்கள் என்னிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதால் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

டாக்டர்கள் அளித்த பிரேத பரிசோதனை அறிக்கையில் கல்பனா, கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டதும் உறுதியானது. இதையடுத்து இந்த வழக்கை, திரு.வி.க.நகர் போலீசார் கொலை வழக்காக மாற்றினர். பின்னர் கைதான சுரேசை சிறையில் அடைத்தனர்.

Next Story