வீடு பாக பிரிவினை தகராறு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை தம்பி கைது
காஞ்சீபுரத்தில் வீடு பாகபிரிவினை தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி மசூதி தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் வெங்கட் என்கிற லட்சுமிநாராயணன் (வயது 30). இவருடைய தம்பி நாராயணன் (28). இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவரது தந்தை பெருமாள் இறந்து விட்டார். பெருமாள் உயிருடன் இருக்கும்போது வெங்கட்டுக்கு கீழ் வீடும், நாராயணனுக்கு மேல் வீடும் பாகபிரிவினை என்று கூறி இருந்ததாக தெரிகிறது. இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் வீட்டு பாகபிரிவினை பிரச்சினையில் அண்ணன், தம்பிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், கடந்த 13-ந் தேதி மது குடித்திருந்த நாராயணன் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் வெங்கட்டை சரமாரியாக கையில் வெட்டினார். பின்னர் நாராயணன் வெளியே சென்று விட்டார்.
தற்கொலை
இதற்கிடையில், வெங்கட் என்கிற லட்சுமிநாராயணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெருமாள் மனைவி விஜயா சின்ன காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, பெண் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணகி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அண்ணனை கத்தியால் தாக்கியும், அண்ணன் தற்கொலைக்கு காரணமாக இருந்த தம்பி நாராயணனை சின்ன காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர்.
பிறகு அவரிடம் இருந்த கத்தியை போலீசார் கைப்பற்றினர்.
Related Tags :
Next Story