புதுச்சேரியில் மணல் குவாரி அமைக்கப்படும் - நாராயணசாமி தகவல்
புதுவையில் மணல் குவாரி அமைக்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவையில் ஆறுகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்தும் மணல் கொண்டுவர சட்ட சிக்கல் இருப்பதால் புதுவையில் மணல் கிடைக்காமல் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஆறுகளில் இருந்து மணல் ஏற்றி வரும் மாட்டுவண்டிகளையும் பிடித்து வருவாய்த்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் மாட்டுவண்டி தொழிலையே நம்பியிருக்கும் தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சி.ஐ.டி.யு. மாட்டுவண்டி தொழிலாளர்கள் நேற்று தலைவர் சீனுவாசன் தலைமையில் முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது மணல்குவாரி அமைக்கக்கோரி மனுவும் அளித்தனர்.
அவர்களிடம் மனுவினை பெற்றுக்கொண்ட முதல்–அமைச்சர் நாராயணசாமி இதுதொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகானுடன் பேசினார். அதைத்தொடர்ந்து மணல்மேடு பகுதியில் மணல் அள்ள விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதாவது பாசிக் நிறுவனம் மூலம் வருகிற 17–ந்தேதி முதல் சட்ட ரீதியாக மணல் அள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்றனர்.