மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் ஊர்வலம்


மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 15 Sept 2018 3:15 AM IST (Updated: 15 Sept 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளம், ஆறு என நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

நிலக்கோட்டை, 

நாடு முழுவதும் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் 1,183 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்து தர்ம சக்தி சார்பில், திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த 12 விநாயகர் சிலைகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஊர்வலத்துக்கு இந்து தர்ம சக்தி மாநில செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். ஊர்வலமானது, காமராஜர் சிலை, பெரியார் சிலை, மணிக்கூண்டு, கடைவீதி வழியாக கோட்டைக்குளத்துக்கு சென்றது. பின்னர் அங்குள்ள தொட்டியில் சிலைகள் கரைக்கப்பட்டன.

இந்து முன்னணி சார்பாக நிலக்கோட்டை, கொடைரோடு, சிலுக்குவார்பட்டி, காமலாபுரம், சக்கையநாயக்கனூர், மைக்கேல்பாளையம், பள்ளப்பட்டி, ராமராஜபுரம், மட்டப்பாறை, எஸ்.தும்மலப்பட்டி, என்.ஊத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்ட சிலைகள் நிலக்கோட்டை நால்ரோட்டுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தெற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் சிவக்குமார், கோவை கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் மெயின் பஜார், சங்கரன் சிலை, மாரியம்மன் கோவில், அரசு பெண்கள் விடுதி, செங்கட்டாம்பட்டி சாலை வழியாக நிலக்கோட்டை வைகை ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. இதேபோல், இந்து மக்கள் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் பட்டம் தலைமையில் சுமார் 10 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று அணைப்பட்டி வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.

வத்தலக்குண்டு பகுதியில், இந்து முன்னணி சார்பாக 60 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. காளியம்மன் கோவில் அருகே தொடங்கிய ஊர்வலம், கண்ணாப்பட்டியில் முடிவடைந்தது. பின்னர் சிலைகள் வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது. இதில், இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, பா.ஜ.க. ஒன்றிய துணை தலைவர் செந்தில்குமார், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குஜிலியம்பாறை ஒன்றிய இந்து முன்னணி சார்பில், எரியோடு பகுதியில் 15 இடங்களிலும், குஜிலியம்பாறை, பாளையம், ராமகிரி உள்பட 18 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. எரியோட்டில் வைக்கப்பட்ட சிலைகள் குஜிலியம்பாறைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் மொத்தமாக 33 சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து ஆர்.கோம்பை பங்களாமேடு குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி பெரும்பாறை, தாண்டிக்குடி, மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, எம்.ஜி.ஆர்.நகர், புல்லாவெளி உள்ளிட்ட கிராமங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் விநாயகர் சிலைகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தடியன்குடிசை ஆற்றில் கரைக்கப்பட்டன.

ஒட்டன்சத்திரம் பகுதியில் இந்து முன்னணி சார்பாக 63 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் ஊர்வலம் நேற்று நடந்தது. போலீஸ் சோதனைச்சாவடி அருகே ஊர்வலம் தொடங்கியது. இதற்கு மாவட்ட செயலாளர் ரகுபதி தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநில பேச்சாளர் மூகாம்பிகை மணி சிறப்புரை ஆற்றினார். பா.ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் காடேஸ்வரா தங்கராஜ் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தலையூத்து அருவியை அடைந்தது. பின்னர் அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.

பழனியில், விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 62 விநாயகர் சிலைகளும், இந்து முன்னணி சார்பில் 125 சிலைகளும், இந்து மக்கள் கட்சி சார்பில் 45 சிலைகளும், சிவசேனா சார்பில் 32 சிலைகளும், அகில பாரத இந்து மகாசபா சார்பில், 3 சிலைகளும், இந்து மகாசபா சார்பில் 15 சிலைகளும் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த சிலைகள் இன்று முதல் 3 நாட்களுக்குள் கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story