தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்


தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 14 Sep 2018 10:00 PM GMT (Updated: 15 Sep 2018 12:10 AM GMT)

அறிவிப்போடு நின்றுபோன தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

வேலூர், 

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வேளாண் இணை இயக்குனர் சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

ஆம்பூர் சின்னச்சேரி பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து 100-க்கணக்கான மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுகிறது. ஒரு வண்டிக்கு ஒருவர் தான் ரசீது வழங்க வேண்டும். ஆனால் 3 பேர் தனித்தனியாக ரசீது வழங்குகிறார்கள். 3 ரசீதுகளிலும் வெவ்வேறு தொகை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காலை 7 மணி முதல் 12 மணிவரைதான் ரசீது வழங்க வேண்டும். ஆனால் இங்கு நள்ளிரவு நேரத்திலும் ரசீது வழங்கப்படுகிறது.

இதனால் மாட்டு வண்டிகளில் அதிக அளவில் மணல் கடத்தப்பட்டு வேலூர் வரை கொண்டுவரப்படுகிறது. மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல் அரசம்பட்டு பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று 100 முறைக்கு மேல் மனு கொடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோன்று புலிமேடு பகுதியிலும் தடுப்பணை கட்ட வேண்டும்.

அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் புரோக்கர்கள் அதிகமாக உள்ளனர். எனவே, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். தென்பெண்ணை - பாலாறு இணைப்பு குறித்து ஏற்கனவே 2 முறை அறிவிப்பு செய்து நிதியும் ஒதுக்கப்பட்டது. தற்போது 3-வது முறையாக இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு ரூ.648 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த முறையாவது அறிவிப்போடு நின்றுவிடாமல் தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளை சுற்றுலா அழைத்து செல்வதாக கூறுகிறார்கள். யாரை அழைத்து செல்கிறார்கள், எங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் என்ற தகவல் தெரிவிப்பதில்லை. சுற்றுலா அழைத்து செல்லப்பட்டவர்கள் தங்கள் அனுபவம் பற்றி இதுபோன்ற கூட்டத்தில் பகிர்ந்துகொள்வதும் இல்லை. எனவே விவசாயிகள் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்களா என்பதே தெரியவில்லை.

தற்போது தண்ணீரின்றி வேர்க்கடலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சர்க்கரை ஆலைகள் நிலுவை வைத்துள்ள தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பத்தூர் ஏழருவி தடுப்பணையை தூர்வார வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

முன்னதாக ஊட்டச்சத்து மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த கையேட்டினையும் கலெக்டர் ராமன் வெளியிட்டார். 

Next Story